உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நிறைவு: அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; பொதுக்குழு தீர்மானமின்றி ஓ.பி.எஸ்சை நீக்கியது எப்படி?; எடப்பாடி தரப்புக்கு நீதிபதி சரமாரி கேள்வி

புதுடெல்லி: நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க வேண்டும் என்ற தீர்மானமே இல்லாதபோது அவரை எப்படி நீக்கினீர்கள் என எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தரப்புக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வியெழுப்பியுள்ளது. கடந்த ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு  உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் நேற்று ஐந்தாவது நாளாக விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக கட்சி மற்றும் கட்சி தலைமை அலுவலகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் சி.எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் வாதத்தில், ”ஆரம்பத்தில் இருந்தே நீதிமன்றத்திலும், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திலும் தவறான தகவல்களை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொடுத்து வருகின்றனர் என தெரிவித்தனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி தினேஷ் மகேஸ்வரி,’’அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க வேண்டும் என்ற தீர்மானமே  இடம்பெறவில்லை. அப்படி இருக்கும்போது எதன் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார் என கேள்வியெழுப்பினார். அதற்கு பதலளித்த அதிமுக தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ‘‘அதிமுகவின் உட்சபட்ச அதிகாரங்களைக் கொண்ட ஒரு அமைப்பு தான் அதிமுக பொதுக்குழு. எனவே அதற்கு தான் அனைத்து அதிகாரங்கள் உண்டு. அதன் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரிவித்தனர்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தரப்பு வாதங்களுக்கு பதில் வாதம் செய்தம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார், ‘‘அதிமுகவில் இல்லாத இரண்டு பதவிகளை உருவாக்க வேண்டும் என்று கேட்டதே எடப்பாடி பழனிசாமி தரப்பு தான். இருப்பினும் அதுதொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் சரியாக சென்று கொண்டு இருந்தபோது தற்போது அவர்களே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளனர். பொதுக்குழு கூட்டுவது தொடர்பான நோட்டீசை முன்கூட்டியே வழங்கவில்லை. மேலும் காலதாமதமாக வழங்கப்பட்ட நோட்டீசிலும் இடம்பெறாத விஷயங்களை அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கொண்டு வந்து நிறைவேற்றி உள்ளனர்.

குறிப்பாக இதற்கு முன்பு கூட்டப்பட்டுள்ள பொதுக்குழு நோட்டீஸ்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அதனை நீதிமன்றத்திலும் தாக்கல் செய்துள்ளோம். அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தாலே உங்களுக்கு தெளிவாக புரியும்.
அதனால் கடந்த ஜூலை 11ம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு சட்டவிரோதம் ஆகும். மேலும் அடிப்படை உறுப்பினர்களால் தான் உயர்மட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதை எக்காலத்திலும் அதிமுக என்ற கட்சியில் மாற்ற முடியாத விதிமுறை ஆகும்’’ என தெரிவித்தார்.

இதையடுத்து மீண்டும் குறுக்கிட்ட நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரண்டு பதவிகள் இருக்கிறது. இந்த இரண்டில் ஒரு பதவியில் இருப்பவர்அந்த பதவியில் தொடர விருப்பமில்லை அல்லது அவர் அந்த பதவியில் தொடர்வதால் கட்சிக்கு பாதகம் ஏற்படுகிறது. அல்லது அந்த பதவியில் இருப்பதற்கு தகுதி இல்லாதவர் என்ற நிலை உருவாகிறது என்றால் அப்போது என்ன செய்வீர்கள். இல்லையென்றால் அதிமுகவின் கட்சி சட்ட விதிகளை பயன்படுத்தி பொதுக்குழு தேர்தலை நடத்தி  அதில் யார் பலசாலி அதாவது, உறுப்பினர்கள் ஆதரவு யாருக்கு என்று தெரிந்துகொள்ள வேண்டியது தானே என ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு கேள்வியெழுப்பினார்.

இதையடுத்து அதற்கு பதிலளித்த அவரது தரப்பு வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார்,‘‘காலியாக இருக்கக்கூடிய இடத்திற்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். இருப்பினும் அதாவது ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரண்டு பதவிகளுக்கும் ஒரே நேரத்தில் தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும்’’ என தெரிவித்தார். இதையடுத்து மீண்டும் குறுக்கிட்ட நீதிபதி தினேஷ் மகேஸ்வரி,‘‘அதிமுக பொதுக்குழு உட்பட உங்களது கட்சி விவகாரங்கள் அனைத்தும் தொடர்ந்து நீதிமன்றங்களிலேயே இருந்து வந்தால் கட்சியின் செயல்பாடுகளை எவ்வாறு நிர்வகிப்பீர்கள் என்றும், குறிப்பாக, இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டம் என்பது சரிதானா?’’ என இரு தரப்புக்கும் சரமாரியான கேள்விகளை எழுப்பினார். அதற்கு பதலளித்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார், ‘‘கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டம் ஓரளவுக்கு சரியானது தான்’’ என்று பதிலளித்தார்.

இதையடுத்து மீண்டும் குறுக்கிட்ட நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டம் நீங்களே சரியானது என்றும், அவசர காரணத்திற்காக கூட்டப்பட்டது என்றும், அந்த கூட்டத்தின் போது தான் இடைக்கால பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றும் தெரிவிக்கிறீர்கள். அப்படியென்றால் அந்த கூட்டத்தின் போது அடுத்த பொதுக்குழு குறித்த தேதி குறிப்பிட்டதும் சரியானது தானே?. அதில் என்ன தவறு உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வத்தின் தரப்பை கேட்டார். இதையடுத்து இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்டதாகவும், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.மேலும் அனைத்து தரப்பினரும் இந்த வழக்கு தொடர்பான எழுத்துப்பூர்வ வாதங்களை வரும் 16ம் தேதிக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.