உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நேற்று எழுப்பிய கேள்விகள் தீர்ப்பு குறித்த சில யூகங்களை எழுப்பியுள்ளன.
தீர்ப்பு எப்படி வரப் போகிறது?அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் எழுத்துப் பூர்வமாக வாதங்களை திங்கள் கிழமைக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பு எப்படி வரப் போகிறது என்ற பேச்சு தான் அதிமுகவைச் சுற்றி நடக்கிறது.
ஏன் இந்த பிளவு?ஒற்றை தலைமை என்ற கோஷம் அதிமுகவுள் எழுந்த பின்னர் தான் இரு அணிகளாக பிரியும் சூழல் அதிமுகவில் ஏற்பட்டது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், பெரும்பாலான பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருந்தது. ஒருங்கிணைப்பாளர் என்ற உச்ச பதவியும் ஒரு சிலரின் ஆதரவுமே ஓபிஎஸ் வசம் இருந்தது.
நீதிபதிகள் கேட்ட அந்த கேள்வி?தங்கள் பக்கம் ஆதரவு அதிகமாக இருக்கிறது என்ற நிலையில் அவசரகதியில் சில விஷயங்களை எடப்பாடி பழனிசாமி செய்ய முற்பட்டதன் விளைவாக எட்டு மாதங்களாக கட்சி தேக்க நிலையை சந்தித்துள்ளது. தொண்டர்கள் யார் பக்கம் செல்வது என புரியாமல் குழம்பிப் போயுள்ளனர். உங்கள் கட்சி விவகாரம் தொடர்ந்து நீதிமன்றத்திலேயே நடந்து வந்தால் எப்படி கட்சியை கவனிப்பீர்கள் என உச்ச நீதிமன்ற நீதிபதிகளே ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பிடம் கேட்டதைக் கொண்டும் இதை புரிந்து கொள்ளலாம்.
விதிகள் தெளிவாக இல்லை!ஏன் இந்த வழக்கு விவகாரம் நீண்டு கொண்டே செல்வதற்கான பதிலையும் நேற்று விசாரணையின் போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பேச்சிலிருந்து பெறலாம். இரு தரப்பும் தங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்று சொல்லிவருகிறது. ஏனெனில் பொதுக்குழு தொடர்பான விதிகள் தெளிவாக அதிமுகவில் வகுக்கப்படவில்லை என்பது தான் நேற்றைய விசாரணையின் மூலம் தெரிந்து கொள்ளும் சேதி.
இன்னொரு பிளவை அதிமுக தாங்குமா?டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை வெளியேற்றிய பின்னர் கட்சி தென் மாவட்டங்களில் பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. இப்போது மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டால் அது கட்சிக்கு நல்லதல்ல என்பதே அதிமுக தொண்டர்களின் எண்ண ஓட்டமாக இருக்கிறது. கிட்டதட்ட இதை ஒட்டியே தீர்ப்பு வழங்கப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஓபிஎஸ் செம ஹேப்பி!இன்னார் வசம் கட்சியை ஒப்படைக்கலாம் என்ற நிலைக்கு நீதிமன்றம் வர வாய்ப்பு இல்லை. அரசியல் ரீதியாக தீர்வு காணச் சொல்லவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகிறார்கள். ஏற்கெனவே டெல்லி இரு தரப்பையும் ஒற்றுமையாக போகச் சொல்லி வலியுறுத்தும் நிலையில் இப்படியொரு தீர்ப்பு வெளியானால் அவர்கள் மீண்டும் இரட்டை தலைமைக்கு பச்சை கொடி காட்டுவார்கள். எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்ஸுடன் கை குலுக்கியே ஆக வேண்டிய நிலை ஏற்படலாம்.