கொடைக்கானல்: கொடைக்கானலில் வழக்கமாக டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரைஉறை பனிக் காலமாக இருக்கும். இந்தமுறை கடந்த நவம்பர் மாதத்திலேயே உறை பனிக் காலம் தொடங்கியது. ஏற்கெனவே பகல் நேரத்தில் 15 டிகிரி முதல் 18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், இரவில் 7 டிகிரி முதல் 10 டிகிரி செல்சியஸுக்கும் குறைவான வெப்பநிலை உள்ளது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக வெப்பநிலை வெகுவாக குறைந்து கடும் உறை பனி நிலவிவருகிறது. புல்வெளிகள் வெண்மையாகப் பனி படர்ந்து உறைந்து கிடக்கின்றன.
கடுமையான குளிர் காரணமாகசுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிற்பகல் 3 மணி வரை இதமான வெயில் அடிக்கிறது. அதற்கு பிறகு அதிகரிக்கும் குளிர் நள்ளிரவில் உறைய வைக்கும் அளவுக்கு உள்ளது.
பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். இதே நிலைமை நீடித்தால், சில நாட்களில் மைனஸ் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் சூழல் உள்ளது.
பிரையண்ட் பூங்கா மற்றும் ரோஸ் கார்டனில் நிழல் வலையால் தாவரங்களை மூடி தோட்டக்கலைத் துறையினர் பாதுகாத்து வருகின்றனர். அதேசமயம், விவசாய நிலங்களில் பனிப்பொழிவால் செடிகள் கருகி வருகின்றன. அதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.