யாழ் மாவட்டத்தில் பிறப்பு பதிவினை மேற்கொள்ளத் தவறியவர்களுக்கு, எதிர்வரும் 16.03.2023 மீண்டும் விஷேடபிறப்பு பதிவு சேவைக்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் இதுவரை பிறப்பு பதிவை மேற்கொள்ளாத சிறுவர்கள் உட்பட 31 பேருக்கு பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் பிறப்பு பதிவு செய்யும் விஷேட நிகழ்வு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (11) நடைபெற்றது
யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
.23.12.2022 ஆம் திகதி மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைவாக யாழ் மாவட்டத்தில் பிறப்பு பதிவு செய்யாதவர்களை அடையாளம் கண்டு பிறப்பு பதிவு செய்யும் இந்த விசேட சேவை ஒழுங்குபடுத்தப்பட்டது.
பிரதேச மட்ட உத்தியோகத்தர்கள் தங்களது பிரிவுகளில் இதுவரை பிறப்பு பதிவினை செய்யாத சிறுவர்கள் மற்றும் ஏனைய நபர்களை அடையாளங்கண்டு பிறப்பு பதிவினை மேற்கொள்ள வலியுறுத்துவதோடு, பிறப்பு பதிவினை மேற்கொள்ளாதவர்களுக்கு எதிர்வரும் 16.03.2023 விஷேடசேவை ஒழுங்குபடுத்தப் பட்டுள்ளதாக பதில் அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மேலதிக மாவட்ட பதிவாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் மற்றும் சிறுவர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.