ஆஸ்கர் விருதுக்கு அடுத்து திரைத்துறையினருக்குக் கொடுக்கப்படும் உயரிய விருதான ‘கோல்டன் குளோப்’ விருதினை வென்று இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் நிலை நாட்டியிருக்கிறது ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ‘நாட்டு நாட்டு’ பாடல். உலக லெவலில் ஹிட்டடித்த இப்பாடலை, தமிழில் எழுதிய பாடலாசிரியர் மதன் கார்க்கியிடம் வாழ்த்துகளுடன் பேசினேன்.
“‘நாட்டு நாட்டு’ பாடலின் சூழலை இசையமைப்பாளர் கீரவாணி சார் விளக்கியபோது, ‘ஹீரோ, வில்லன், காதல், நட்பு, விட்டுக்கொடுத்தல், தியாகம் என ஒரு படத்திற்குத் தேவையான அனைத்தும் இந்தப் பாடலுக்குள் இருக்கிறது’ என்று பாராட்டினேன். ‘எனக்கு இந்தமாதிரி குத்துப் பாட்டு பண்றதெல்லாம் பிடிக்கவே பிடிக்காது. மெலடி பாடல் கொடுத்தால் எஞ்சாய் பண்ணி இசையமைப்பேன்’ என்றார் அவர். கீரவாணி சாருக்கு மெலடி பாடல்கள்தான் பிடிக்கும். ராஜமெளலி சார் கேட்டுக் கொண்டதற்காக மட்டும்தான், ‘நாட்டு நாட்டு’ பாடலை உருவாக்கினார். இந்தப் பாடலுக்கு ‘கோல்டன் குளோப்’ விருது கிடைக்கும் என்று நிச்சயம் அவரே எதிர்பார்த்திருக்கமாட்டார்.
ஆனால், தற்போது விருது கிடைத்ததில் அவர் மட்டுமல்ல, மொத்த டீமும் உற்சாகத்தில் இருக்கிறது. காலையிலிருந்து அனைவரிடமும் பேசினேன். வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டோம். விருதுக்கான மொத்த கிரெடிட்டும் ராஜமெளலி சாருக்கும் கீரவாணி சாருக்கும்தான். ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆரின் நடனத்தையும் பாராட்டியே ஆகவேண்டும்” என்று பாராட்டிப் பேசுபவரிடம், “தமிழில் ‘நாட்டு நாட்டு’ பாடலைப் புதிதாக எழுதினீர்களா அல்லது மொழிமாற்றம் மட்டும் செய்தீர்களா?” என்று கேட்டோம்,
“நான் எழுதிய பாடல்தான். முதன் முதலில் தெலுங்கில், இப்பாடலை சந்திரபோஸ் எழுதியிருந்தார். அர்த்தம் தெரியாவிட்டாலும் நடன அசைவுக்கும் சூழலுக்கும் ஏற்றவாறு பாடலை மட்டுமே கேட்டு இரண்டே மணி நேரத்தில் எழுதிக்கொடுத்தேன். தெலுங்குப் பாடலுக்கும் தமிழ்ப் பாடலுக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. கீரவாணி சார் மகன் காலபைரவாதான் இப்பாடலைப் பாடியுள்ளார். ராஜமெளலி சார், கீரவாணி சார் குடும்பத்தினர் என அனைவரும் இந்தப் பாடலுக்காக உழைத்திருக்கிறார்கள்.
பாடல் ஆரம்பிக்கும்போது, ‘கருந்தோளு கும்பலோடு பட்டிக்காட்டுக் கூத்தக் காட்டு’ என்று ஆரம்பித்து ‘வெற்றிக்கொடியை நாட்டு’ என்று முடித்திருப்பேன். அதாவது, கறுப்பு நிறம் கொண்ட நம் இந்தியர்களைத் தவறாகப் பேசும்போது, நாயகர்கள் நடனம் ஆடி வெற்றி பெறுவார்கள். அப்படித்தான், ஆங்கிலேயர்களின் அரங்கில் வெற்றி பெற்றிருக்கிறது இப்பாடல். மேலும், தமிழில் மட்டும்தான் இப்படி வரிகள் வந்துள்ளன. மற்ற மொழிகளில் இந்தக் குறிப்பிட்ட வரிகள் கிடையாது” என்றார் பெருமிதத்துடன்.