பாதுகாப்புக்காக கைத்துப்பாக்கி வைத்துக்கொள்ள நுபுர் சர்மாவுக்கு டெல்லி போலீஸ் அனுமதி

முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு (2022) மே மாதம் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற நுபுர் சர்மா, முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக கண்டனங்களும் குவிந்தன. உலக அளவில் வரை, நுபுர் சர்மாவுக்கு எதிராக கோஷங்களும் போராட்டங்களும் வெடித்தன. மேலும், அவர் மீது வழக்குகளும் தொடரப்பட்டன. இதனையடுத்து அவர் பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
image
இவருக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட இருவர், கொலை செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த நேரத்தில், “நுபுர் சர்மாவின் தலையை துண்டிப்போருக்கு எனது வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துகளை பரிசாக வழங்குவேன்” என ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் சல்மான் சிஷ்டி என்பவர் வீடியோ வெளியிட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அவர் தனது கருத்துகளை திரும்பப் பெற்றுக் கொள்வதாக ட்விட்டரில் அறிக்கை மூலம் சொல்லி இருந்தார். அதோடு மத உணர்வுகளை புண்படுத்துவது தனது நோக்கமல்ல என்றும் அதில் தெரிவித்து இருந்தார்.
அதேநேரத்தில், நுபுர் சர்மா குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “நுபுர் சர்மாவின் பொறப்பற்ற பேச்சால் இந்த நாடு பற்றி எரிகிறது. நுபுர் சர்மா தனது கருத்துகளை காலம் தாழ்த்தி வாபஸ் பெற்றுள்ளார். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் கூறுகிறார். அவரால் தான் இந்த நாட்டுக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தொலைக்காட்சியில் தோன்றி மன்னிப்பு கோர வேண்டும்” எனத் தெரிவித்திருந்தது.
image
இந்தச் சூழலில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் தெரிவித்ததை அடுத்து அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் டெல்லி போலீசார் பாதுகாப்பு அளித்திருந்தனர். மேலும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் கோரி டெல்லி காவல்துறையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, நுபுர் சர்மா பாதுகாப்பு கருதி, அவர் கைத்துப்பாக்கி வைத்துக்கொள்ள டெல்லி போலீஸ் அனுமதி வழங்கியுள்ளது. `இப்போதைக்கு, அவர் பாதுகாப்பிற்காக ஒரு துப்பாக்கியை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்’ என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.