கோவை துடியலூர் பகுதியில் வருமானவரித்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “நாம் கட்டும் வரி எங்கே செல்கிறது என்று தெரிந்தால் அது சுமையாக இல்லாமல், மகிழ்ச்சியாக இருக்கும். அதுதொடர்பான அதிக விழிப்புணர்வை வருமானவரித்துறை செய்ய வேண்டும்.” என்று கோரிக்கை வைத்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த லோகேஷ் கனகராஜ், “சினிமாவில் எல்லா படங்களும் ஓட வேண்டும். எல்லா ரசிகர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இது வெறும் சினிமாதான். அதைப் பொழுதுபோக்கு அம்சமாகத்தான் பார்க்க வேண்டும்.
ரசிகர்கள் அவர்கள் பொறுப்பை உணர வேண்டும். உயிரை விடும் அளவுக்கு எல்லாம் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை.
‘வாரிசு’ படத்துக்காகத்தான் காத்திருந்தோம். இன்னும் 10 நாள்களில் ‘விஜய் 67’ படத்தின் அப்டேட் எதிர்பார்க்கலாம். படப்பிடிப்பு நடந்து வருகிறது. ரிலீஸ் தேதி எல்லாம் இன்னும் முடிவு செய்யவில்லை“ என்றவரிடம்,
“தமிழகம் எனச் சொல்ல விரும்புகிறீர்களா தமிழ்நாடு என சொல்வீர்களா?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு லோகேஷ், “நான் தமிழ்நாடு என சொல்லவே விரும்புவேன்” என்று பதில் அளித்தார்.