சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் மோதலில் ஈடுபட்டவர்கள் மீது சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு கடந்த 9-ம் தேதி நடைபெற இருந்த தேர்தல், பல்வேறு பிரச்சினை காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வழக்கறிஞர் சத்தியபால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “தேர்தலை நேர்மையாக நடத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட QR Code நடைமுறையால் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, வெளியில் இருந்த சிலர் உள்ளே புகுந்ததால் தேர்தலை ரத்து செய்ய நேர்ந்தது” என்று கூறினார்.
அப்போது நீதிபதிகள், “வாக்குச்சாவடியை கைப்பற்றியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தரப்பு வழக்கறிஞர், “இந்த விவகாரத்தில் நீதிமன்றம் அமைதியாக இருக்கக்கூடாது” என்று தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், “சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் பெருமையை மீட்டெடுக்க வேண்டும். தேர்தல் தினத்தன்று நடைபெற்ற பிரச்சினை தொடர்பான அறிக்கை மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து இந்த விவகாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்று தெரிவித்தனர்.
மேலும், நிறுத்தப்பட்ட தேர்தலை விரைவில் நடத்தும் வகையில் புதிய தேதி முடிவு செய்யப்படும் என தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை பொங்கல் விடுமுறைக்கு பின் ஒத்திவைத்தனர்.