சேலம் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மணியனூர் பகுதி அம்மா உணவகத்தில் வேலைப்பார்க்கக் கூடிய ஊழியர்கள் புகார் மனு ஒன்று அளித்தனர். அதில், ”நாங்கள் 50-வது வார்டுக்குட்பட்ட மணியனூர் பகுதியில் அம்மா உணவகத்தில் பணியாற்றி வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளாக மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், தற்போது திடீரென ஆறு பேரை நீக்குவதாகக் கூறி தி.மு.க 50-வது வார்டு கவுன்சிலர் பழனிசாமியும், கொண்டலாம்பட்டி மண்டலக் குழுத் தலைவர் அசோகனும் தெரிவிக்கிறார்கள்.
நாங்கள் மக்களுக்காக சேவை செய்து வருகிறோம். அம்மா உணவகத்தின் ஒரு சில மாதங்கள், எங்கள் குழுவிலுள்ள 12 பேரும் சேர்ந்து பணம் போட்டு மக்களுக்காக உணவை வழங்கியிருக்கிறோம். தற்போது பணியில் நீட்டிக்க மாதம் 5,000 ரூபாய் கேட்டால் எவ்வாறு வழங்க முடியும். இந்தச் சம்பளத்தை வைத்துதான் நாங்கள் குடும்பம் நடத்தி வருகிறோம். இந்த நிலையில், பணம் கொடுக்க வேண்டுமென மிரட்டுவது எங்களுக்கு மிகவும் வேதனையாக உள்ளது.
மேலும் இது குறித்து மண்டலக் குழுத் தலைவர் அசோகனிடம் நாங்கள் சென்று கேட்டபோது, எங்களை மிரட்டும் விதமாக, `தொடர்ந்து பணியில் நீடிக்க வேண்டுமென்றால் மாதம் 5,000 ரூபாய் வீதம் எனக்கும், 50-வது வார்டு கவுன்சிலர் பழனிசாமிக்கும் வழங்க வேண்டும். இல்லையென்றால் வேலையில் நீடிக்க முடியாது’ என மிரட்டினார்” எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இந்த விவகாரம் தொடர்பாக கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், “அம்மா உணவகம் என்பது அம்மாவால் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் தி.மு.க அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு வருகிறது.
தி.மு.க அரசின் இந்த மக்கள் விரோத செயலுக்கு அ.தி.மு.க சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் சேலம் அம்மா உணவகத்தை மூடுவதற்கு தி.மு.க-வினர் கையில் எடுத்துக் கொண்டுள்ள ஆயுதம் என்பது கட்டடம். `கட்டடம் சரியில்லை. அதனால் இடித்துவிட்டு புதிதாக கட்டப் போகிறோம்’ எனக் கூறி வருகின்றனர்.
கட்டடம் சரியில்லை என்றால் வேறு கட்டடத்தில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தலாமே… அதற்கு ஏன் திட்டத்தையே மூட வேண்டும். ’மூட்டைப் பூச்சிக்கு பயந்து யாராவது வீட்டை கொளுத்துவார்களா?’ அது மாதிரி இருக்கிறது தி.மு.க-வின் இந்த செயல். எனவே முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.