கேராளவில் திருச்சூர் அருகே ஒரு ஆணையும் அவரது குடும்பத்தினரையும், பல பெண்கள் சேர்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்திய வீடியோ ஒன்று சமுக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் அந்த பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளா திருச்சூரில் `எம்பரர் இம்மானுவேல் ரிட்ரீட் சென்டர்’ என்ற இடத்தில் ஷாஜி என்ற நபரொருவர், அவரது மனைவி ஆஷ்லின், மகன் சாஜன் மற்றும் அவர்களது உறவினர்கள் எட்வின் மற்றும் அன்வின் ஆகியோருடன் காரில் சென்று கொண்டிருந்தள்ளார். அப்போது அவரது வண்டியை மறித்த சில பெண்கள், காரில் இருந்தவர்களை வெளியேற்றி, அனைவர் மீதும் கொலைவெறி தாக்குதலில் ஈடுப்பட்டுள்ளனர். அனைவரும் சேர்ந்து ஒரு குடும்பத்தினர் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டதன் வீடியோ காட்சி, சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில் அது பேசுபொருளாக மாறியது.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், தாக்குதலுக்கு உள்ளான ஷாஜி என்ற நபர், பெண்ணொருவரின் புகைப்படத்தை மார்பிங் செய்து, பல்வேறு சமூக வலைதளங்களில் பதிவிட்டதாகவும், அதனால் தான் இந்த தாக்குதல் நடந்ததாகவும் தெரியவந்திருக்கிறது. அப்பெண் அங்குள்ள ஒரு தேவாலயத்தை சேர்ந்தவர் என சொல்லப்படுவதால், தேவாலயத்தின் சார்பில் ஷாஜி மீது ஏற்கெனவே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதுதொடர்பாக காவல்துறையின் விசாரணை நடைபெற்றுவந்த நேரத்தில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான ஷாஜி மற்றும் அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றும் தாக்குதலுக்கு வேறு காரணங்களும் சொல்லப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டதாக 59 பெண்கள் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், கேரளா சாலுக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற காவலில் அவர்களை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த பெண்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 307ன் கீழ் கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தாக்குதலில் ஈடுபட்ட 11 பேர் மட்டும் கைது செய்யப்பட்டிருப்பதாக சில செய்திகள் சொல்கின்றன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM