பூந்தமல்லி: பூந்தமல்லியில் நேற்று நடைபெற்ற ஒன்றியக்குழு கூட்டத்தில், ரூ.2.26 கோடி மதிப்பில் சாலைகள் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பூந்தமல்லி அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று மாலை ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் பூவை எம்.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் யமுனா ரமேஷ், கே.சுரேஷ்குமார், பத்மாவதி கண்ணன், ஜெயலோகநாதன், வழக்கறிஞர் என்.பி.மாரிமுத்து, சத்யபிரியா முரளிகிருஷ்ணன், சிவகாமி சுரேஷ், பிரியா செல்வம், உமா மகேஸ்வரி சங்கர், பி.டில்லிகுமார், வி.கன்னியப்பன், கேஜிடி.கௌதமன், எம்.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கவுதமன் உள்பட பல கவுன்சிலர்கள் பேசும்போது, பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு கட்ட அனுமதி வாங்குவதற்கு நீண்ட மாதங்களாக அலைய வேண்டிய நிலை உள்ளது. பூந்தமல்லி ஒன்றியத்துக்கு கட்டிட வரைபட அனுமதி வழங்க நியமிக்கப்பட்ட சிஎம்டிஏ அதிகாரி இங்கு வருவதே இல்லை. இதனால் கடன் வாங்கி வீடு கட்டும் பலர், கட்டிட அனுமதி கிடைக்காமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் கட்டிடங்கள் கட்ட அனுமதி கோரி ஏராளமான விண்ணப்பங்கள் வந்தாலும், ஒன்றிரண்டு விண்ணப்பங்களுக்குகூட அனுமதி கொடுப்பதில்லை. எனவே, பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்துக்கு தனியே புதிய கட்டிட அனுமதி வழங்க அதிகாரியை நியமிக்க தீர்மானம் இயற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதற்கு ஒன்றியக்குழு தலைவர் ஜெயக்குமார், இனிமேல் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரை பொதுமக்கள் சந்திக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்தார். இக்கூட்டத்தில், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் சீரமைப்பு, மழைநீர் கால்வாய் அமைத்தல், அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மன்ற ஒப்புதலுக்கு கோரப்பட்டது. மேலும், ரூ.2.26 கோடி மதிப்பில் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்வது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.