மத்திய அரசு சார்பில், மதுரை-கொல்லம் இடையே நான்குவழிச் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மதுரை மாவட்டம், வடுகப்பட்டி முதல் விருதுநகர்-தென்காசி மாவட்டங்களின் எல்லையான தெற்கு வெங்காநல்லூர் வரையிலான 36 கிலோமீட்டர் தூரம் வரையான தேசிய நெடுஞ்சாலை பணிகள் விருதுநகர் மாவட்டத்துக்குள் நடைபெறுகின்றன. இந்த, தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்கான ஜல்லிக்கற்கள், கிரஷர் மண் ஆகியவை விருதுநகர் மாவட்டம், அச்சம்தவிழ்த்தான் ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் கல்குவாரியிலிருந்து எடுத்துச்செல்லப்படுவதாகக் கூறப்படுகிறது. இதற்கு தமிழ்நாடு அரசும் அனுமதி அளித்திருப்பதாகத் தெரிகிறது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே அச்சம்தவிழ்த்தான் ஊராட்சியில் மானாவாரி விவசாய நிலங்களுக்கு மத்தியில் சுமார் 56 ஏக்கர் பரப்பளவில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் கல்குவாரிக்கு அந்த ஊர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நரியன்குளம்-அச்சம்தவிழ்த்தான் ஊர்களுக்கு இடையே புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த கல்குவாரியில் ராட்சத தளவாடங்கள் பொருத்தப்பட்டு முழுவீச்சில் உற்பத்தி நடைபெறுவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
இதனால் கொதிப்படைந்த ஊர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், கல்குவாரிக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் கண்டன போஸ்டர்கள் ஒட்டி முதற்கட்டமாக எதிர்ப்பினை பதிவுசெய்தனர். அதைத் தொடர்ந்து, முதலமைச்சர் தனிப்பிரிவு முதல், துறைரீதியாக மாநில, மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பியும் போராட்டம் நடத்தினர். ஆனால், பொதுமக்களின் பிரச்னைகளுக்கு தீர்வுகாண இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கல்குவாரிக்கு எதிரானப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வாக, பள்ளி மாணவ, மாணவிகள் களத்தில் இறங்கியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
அதன்படி, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும்விதமாக, அச்சம்தவிழ்த்தான், நரியன்குளம் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 193 பள்ளி மாணவ-மாணவிகள் ஒருநாள் பள்ளி புறக்கணிப்பு செய்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக, பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடம் பேசுகையில், “அச்சம்தவிழ்த்தான், நரியன்குளம் ஆகிய இரண்டு ஊர்களைச் சேர்ந்த பெரும்பாலானவர்களுக்கு தெரிந்த ஒரேத்தொழில் விவசாயம் மட்டுமே. ஆனால் எங்கள் பகுதியில் விவசாயத்தை முற்றிலும் அழிக்கும்விதமாக, கல்குவாரி அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசிடமும், அதிகாரிகளிடமும் பலமுறை மனு அளித்துவிட்டோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாளுக்குநாள் நலிந்து வரும் விவசாயத்தை, பாதுகாக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில் அச்சம்தவிழ்த்தான் ஊரில் நடக்கும் விவசாயம் நாட்டுக்கு தீங்கானதா? அதை ஏன் அழிக்கப்பார்க்கிறார்கள்? இங்கு வாழும் ஜனங்களின் வாழ்வாதாரத்தையும், நாளைய தலைமுறையின் ஆரோக்கியத்தையும் காப்பதற்காகவே நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். அது ஏன் அரசின் காதுகளுக்கு எட்டவில்லை?
எங்களைத் தொடர்ந்து, பிள்ளைகளின் காலத்தில் அவர்களுக்கு இருப்பிடமும், உடையும் கொடுத்துவிட்டு, உணவையும், ஆரோக்கியத்தையும் விலைக்கொடுத்தா வாங்கித்தர முடியும். புதிதாக விவசாயம் நடைபெறும் நிலத்தின் பரப்பளப்பை அதிகரிக்க முடியாவிட்டாலும், முடிந்தவரை இருக்கிற நிலப்பரப்பையாவது பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லவா? ஆனால், அதற்கும் இங்கு வழியில்லை என்றபோது, எதற்காக கல்வி, சுகாதாரம், ஆரோக்கியம், இயற்கை, பாதுகாப்பு என்றெல்லாம் ஏட்டில் எழுதிப்படிக்கவேண்டும்.
அதனால்தான், பெற்றோர்களாகிய எங்களின் சம்மதத்துடன் அச்சம்தவிழ்த்தான், நரியன்குளம் ஆகிய இரண்டு ஊர்களைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகளும் ஒருநாள் பள்ளி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அத்தனை மாணவர்களும், ஒட்டுமொத்தமாக பள்ளிப் புறக்கணிப்பில் ஈடுபட்டது ஏன்? எதற்காக? என்பதை விளக்கிக் சொல்லி எங்களது கையொப்பத்துடன் கடிதமும் கொடுத்துள்ளோம். அவை அனைத்தும் பள்ளி வாயிலின் இரும்புகேட் மற்றும் காம்பவுண்ட் சுவற்றில் ஒட்டப்பட்டுள்ளன.
இனியும், அரசு எங்களின் வாழ்வாதார பிரச்னையின் மீது கவனம் செலுத்தி அச்சம்தவிழ்த்தான் ஊராட்சியில் கல்குவாரி செயல்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லையெனில் இந்தப் போராட்டம் தொடரும்” என எச்சரித்துள்ளனர்.