தேசிய கங்கை தூய்மை திட்டம் | காவிரி, வைகை, தமிரபரணியை தூய்மைப்படுத்த வழக்கு:  மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு 

மதுரை: தேசிய கங்கை தூய்மை திட்டத்தின் கீழ் காவிரி, வைகை, தாமிரபரணி நதிகளை தூய்மைப்படுத்தக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை பொதும்பு அதலையைச் சேர்ந்த கே.புஷ்பவனம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: மத்திய அரசு நாட்டிலுள்ள முக்கிய நதியை தூய்மைப்படுத்தவும், பாதுகாக்கவும் ரூ.30 ஆயிரம் கோடியில் கங்கை தூய்மை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 408 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் 228 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளது. 132 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் உள்ளது. கங்கை தூய்மை திட்டத்தில் 9 மாநிலங்களுக்கு மத்திய அரசு 2017 முதல் 2022 வரை ரூ.9895.16 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

இந்தியாவின் ஜிஎஸ்டி வரி பங்களிப்பில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 14 சதவீத பங்கு தமிழகத்துக்கு சொந்தமானது. இந்தியாவின் ஜிஎஸ்டி, ஜிடிபியில் தமிழகத்தை விட குறைந்தளவு பங்களிப்பை வழங்கும் பல்வேறு மாநிலங்களில் உள்ள நதிகளை தூய்மைப்படுத்த கங்கை தூய்மைத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மதுரை உட்பட 5 மாவட்டங்களில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் வைகை, கங்கை நதிக்கு இணையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நதியாகும். இதேபோல் காவிரியும், தமிரபரணியும் தமிழகத்தின் முக்கிய நதிகளாகும். இந்த 3 நதிகளை பாதுகாக்க உயர் நீதிமன்றங்கள் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கின்றன. ஆனால் போதுமான நிதி இல்லாமல் 3 நதிகளும் உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை.

இதனால் வைகை, காவிரி, தமிரபரணி நதிகள் சீமை கருவேல மரங்கள் வளர்ந்தும், ஆக்கிரமிப்புகள் மற்றும் கழிவுகளால், மணல் அள்ளுவதால் பாழ்பட்டு வருகிறது. எனவே தேசிய கங்கை தூய்மை திட்டத்தின் கீழ் வைகை, காவிரி, தாமிரபரணி நதிகளை தூய்மைப்படுத்த நிதி ஒதுக்கவும் அல்லது வைகை உள்பட 3 நதிகளை தூய்மைப்படுத்த சிறப்பு திட்டம் அமல்படுத்தவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.