ராமர் பாலம் வழக்கு: பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு அவகாசம்!

ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்கக் கோரிய வழக்கில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

இந்தியா – இலங்கை இடையே தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை கடற்பகுதியில் மணல் திட்டுக்கள் உள்ளன. சுண்ணாம்பு கற்களால் உருவான இவை, ராமர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் என கூறப்படுகிறது. ஆனால், இது வெறும் கற்பணை என்றும், இயற்கையாக உருவான மணல் திட்டுக்களே அவை என்றும் கூறப்படுகிறது. இது ராமர் பாலம் எனவும், ஆதாம் பாலம் எனவும் அழைக்கப்படுகிறது.

இதற்கிடையே, ராமர் பாலம் குறித்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்களும், சென்னை பல்கலைக்கழக மாணவர்களும் ஆய்வு ஒன்றை நடத்தினர். அதில் ராமர் பாலம் 18,400 ஆண்டுகள் பழமையானது என தெரியவந்தது.

இந்த பின்னணியில், ராமர் பாலம் இந்துக்களின் அடையாளம், இந்துக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயமாக உள்ளதால், ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். சேது சமுத்திர திட்டத்துக்கு எதிரான பொது நல வழக்கையொட்டி, அவா் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கை நீண்ட இடைவெளிக்கு பின்னரே விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொண்டது. அதன்படி, கடந்த 2018ஆம் ஆண்டு, இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், வழக்கு விசாரணைக்கு வராமல் நிலுவையில் இருந்த நிலையில், அவசர வழக்காக விசாரிக்குமாறு சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்தார். ஆனால், அறிவியல் பூர்வமாக ஆராயப்பட வேண்டும். நம்பிக்கை மற்றும் அடையாளம் என பல்வேறு விவரங்கள் குறித்து ஆராய வேண்டியுள்ளதால், இந்த வழக்கை விரைந்து விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.

இதனிடையே, ராமர் பாலத்தை தேசிய புராதான சின்னமாக அறிவிக்கக்கூடாது. இது பொதுமக்களின் பயன்பட்டுக்காக கட்டப்பட்டவை கிடையாது. இது காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் மணல் திட்டுகள் மட்டுமே என கூறி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் தரப்பில் இடைக்கால மனு ஒன்றும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஒருவேளை ராமர் பாலம் தேசிய புராதான சின்னமாக அறிவிக்கப்படும் பட்சத்தில் இந்திய எல்லைக்குள் உள்ள பகுதிகள் பாதுக்கப்படும். ஆனால், இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை எப்படி பாதுகாக்க இயலும். எனவே, இந்த விவகாரத்தில் சுப்பிரமணிய சுவாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்கக் கோரி சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி வழக்கு மீதான விசாரணை பிப்ரவரி 2ஆவது வாரத்துக்கு உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

சேது சமுத்திர திட்டம்

முன்னதாக, பேரறிஞர் அண்ணாவின் கணவுத் திட்டமும், கலைஞர் கருணாநிதி நிறைவேற்ற பாடுபட்ட திட்டமுமான, சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி தனித் தீர்மானத்தை கொண்டு வந்து சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவினுடைய முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையில் 1963ஆம் ஆண்டு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தில் இடம்பெற்ற திட்டம்தான் சேது சமுத்திர திட்டம். பாக் நீரினையையும், மன்னார் வளைகுடாவையும் இணைக்கும் ஆடம்ஸ் பாலத்தின் குறுக்கே வெட்டப்பட வேண்டிய கால்வாயின் பெயர்தான் சேதுசமுத்திரத் திட்டம் என அழைக்கப்படுகிறது.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றினால், நாட்டினுடைய அந்நியச் செலாவணி வருவாய் அதிகரிக்கும்; தமிழ்நாட்டிலே தொழில் வணிகம் பெருகும்; வர்த்தகம் பெருகும்.; இலங்கையைச் சுற்றிக் கொண்டு கப்பல் போக வேண்டிய கப்பல்களின் பயண தூரம், நேரம் பெருமளவு குறையும்; தமிழ்நாடு மற்றும் அண்டை மாநில துறைமுகங்களில் சரக்குகளைக் கையாளும் திறன் அதிகரிக்கும்; சிறுசிறு துறைமுகங்களை உருவாக்க முடியும்; சேதுக் கால்வாய் திட்டத்தின்கீழ், மீன்பிடித் துறைமுகங்கள் மேம்படுத்தப்படுவதால், கடல்சார் பொருள் வர்த்தகம் பெருகி, அதன் காரணமாக மீனவர்களுடைய பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் உயரும் என கூறப்படுகிறது.

இந்த பின்னணியில், 1998 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் வஜ்பாய், இத்திட்டத்துக்கான திட்டப் பணிகளுக்காக நிதியினை ஒதுக்கினார். பாஜக ஆட்சியில் சேது சமுத்திரத் திட்டத்துக்கான பாதை எது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இதையடுத்து, 2004 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது, 2,427 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, திட்டப் பணிகள் பாதியளவு முடிந்த நிலையில், பாஜக சார்பில் இத்திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. இத்திட்டத்தை ஆரம்பம் முதல் ஆதரித்து வந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா, இத்திட்டத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். தமிழ்நாட்டு மக்களின் நீண்டகால கனவு திட்டமான சேது சமுத்திரத் திட்டம் தொடர்புடைய வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.