சபரிமலை பந்தளத்தில் இருந்து திருவாபரணம் நேற்று மதியம் சபரிமலை புறப்பட்டது. நாளை மகரஜோதி விழா நடக்கிறது. இதையொட்டி போலீசார் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
சபரிமலையில் மகரஜோதி நாளில் ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிப்பதற்கான திருவாபரணங்கள் பந்தளம் அரண்மனையில் பாதுகாக்கப்படுகிறது. மகரஜோதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக இவை பவனியாக எடுத்து வரப்படும். நேற்று காலை முதல் பந்தளம் வலிய கோயில் சாஸ்தா கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கப்பட்டிருந்த திருவாபரணங்கள் மதியம் 12:30 மணிக்கு பேடகங்களில் அடைக்கப்பட்டு கோயிலில் உச்சபூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கங்காதரன் திருவாபரண பெட்டியை சுமந்து வந்தார்.
அப்போது ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டது. அதன் பின்னால் வெள்ளி பெட்டி, கொடி பெட்டி கொண்டு வரப்பட்டது.நேற்று அயிரூர் புதியகாவு கோயிலில் தங்கிய பவனி இன்று ளாகா வனத்துறை சத்திரத்தில் தங்கும். நாளை மாலை 5:30 மணிக்கு சரங்குத்தி வந்தடையும்.
அதிகாரிகள் வரவேற்ற பின்னர் 6:30 மணிக்கு சன்னிதானம் வந்தடையும். ஆபரணங்கள் ஐயப்பன் விக்ரகத்தில் அணிவித்து தீபாராதனை நடந்த சில வினாடிகளில் பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி மூன்று முறை தெரியும். ஜோதி தரிசனத்துக்காக நேற்று முன்தினம் முதல் பக்தர்கள் பல்வேறு இடங்களில் குடில்கள் கட்டி தங்கியுள்ளனர். இன்றும் நாளையும் அதிகமானோர் வருவர் என எதிர்பார்க்கப்படுவதால் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
அதன்படி நாளை பகல் 12:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல முடியும். அதன் பின்னர் வருவோர் ஜன.15 அதிகாலையில்தான் மலையேற முடியும்.
ஜோதி தரிசனத்துக்கு பாண்டிதாவளத்தில் 26 ஆயிரம் பேரும், கோயில் சுற்றுப்புறங்களில் மூவாயிரம் பேரும் நிற்க முடியும் என போலீசார் கணக்கிட்டுள்ளனர். கூடுதலாக வரும் பக்தர்கள் ஜோதி தெரியும் பிற இடங்களுக்கு அனுப்பப்படுவர். சன்னிதானம், பம்பை மற்றும் பத்தணந்திட்டை பாதைகளில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கூடுதல் படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.
நெரிசல் ஏற்படாமல் தடுக்க போலீசார் அறிவுரைகள் வழங்குவர். பம்பைக்கு செல்லும் பாதையில் வழிகாட்டு போர்டுகள் அமைக்கப்படும். பக்தர்கள் தங்கும் இடங்களில் சமைக்க கூடாது. அன்னதானம் மற்றும் ஓட்டல் உணவுகளை உண்ண வேண்டும். பக்தர்கள் தாண்டாமல் இருக்க தடுப்பு வேலிகள் உயரமாக அமைக்கப்படும்.
ராஜபிரதிநிதி இல்லை
நேற்று மதியம் திருவாபரண பவனி புறப்பட்டுக் கொண்டிருந்த போது பந்தளம் மன்னர் குடும்பத்தில் ருக்மினி தம்புராட்டி 92, இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வாத்ய மேளங்கள் நிறுத்தப்பட்டு பவனி பக்தர்களின் சரண கோஷத்துடன் புறப்பட்டு சென்றது. இதனால் மன்னரின் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டிருந்த ராஜராஜவர்மா தனது பயணத்தை ரத்து செய்ததால் ராஜபிரதிநிதி இல்லாமல் பவனி சபரிமலைக்கு வந்து கொண்டிருக்கிறது.
மீண்டும் அரவணை விற்பனை
ஏலக்காயில் பூச்சிமருந்து அளவுக்கு அதிகமாக கலந்தது கண்டு பிடிக்கப்பட்டதால் சபரிமலையில் நேற்று முன்தினம்
மாலையில் அரவணை விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் ஏலக்காய் சேர்க்காமல் அரவணை தயாரிக்கப்பட்டு நேற்று அதிகாலை 3:00 மணி முதல் விற்பனை தொடங்கியது. அனைத்து கவுண்டர்களிலும் நீண்ட கியூ காணப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement