இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை அணி பேட்டிங்
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க வீரராக களமிறங்கிய நுவனிது பெர்னாண்டோ மட்டுமே 50 ஓட்டங்களை கடந்த நிலையில், மற்ற அனைத்து வீரர்களும் இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.
இதனால் இலங்கை அணி 39.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ஓட்டங்கள் சேர்த்து இருந்தது.
இந்திய அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை சிராஜ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.
இலக்கைத் துரத்தி பிடித்த இந்தியா
ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் 216 ஓட்டங்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
முதன்மை ஆட்டக்காரர்களான கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறி இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்தனர்.
ஆனால் பொறுப்புடன் விளையாடிய கே.எல் ராகுல் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.
இறுதியில் இந்திய அணி 43.2 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 219 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.
இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.