#BREAKING :: தமிழ்நாடு சட்டப்பேரவை விவகாரம்… தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி நாளை டெல்லி பயணம்…!!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கான  பாராட்டு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என பேசி இருந்தார். இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணியினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து கடந்த 9ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசு தயாரித்த கொடுத்த உரையில் சில பகுதிகளை வாசிக்க தவிர்த்ததுடன் ‘தமிழ்நாடு அரசு’ என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை.  இதற்கு எதிராக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆளுநர் இருக்கும் பொழுதே அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் வாசித்துக் கொண்டிருக்கும் பொழுதே சட்டப்பேரவையில் இருந்து தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. 

இந்த நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக எம்.பிக்கள் டி.ஆர். பாலு, ஆ.ராசா, என்.ஆர்.இளங்கோ, வில்சன் உள்ளிட்டோர் அடங்கிய திமுக பிரதிநிதிகள் குழு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை டெல்லியில் இன்று சந்தித்து ஆளுநர் குறித்து கோரிக்கை மனு அளித்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாளை காலை 11.30 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்லவுள்ளதாகவும், அங்கு சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக குடியரசுத்தலைவர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து விளக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பரபரப்பான அரசியல் சூழலில் நாளை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி டெல்லி செல்ல உள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.