மதுரை: ‘கோயிலில் அனைவரையும் சமமாக நடத்தப்பட வேண்டும். யாருக்கும் சிறப்பு மரியாதை தரக் கூடாது’ என ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சேர்ந்த பாலசுந்தரம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மல்லாக்கோட்டை கிராம கோயில் தை திருவிழாவில் குறிப்பிட்ட சிலர் மட்டும் தலைப்பாகை அணிந்து, கையில் கோல் ஊன்றி குடை பிடித்து ஊர்வலமாக வந்து மரியாதை செய்யப்படுகிறது. இது ஏற்புடையதல்ல. எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும். யாருக்கும் முதல் மரியாதையோ, சிறப்பு மரியாதையோ செய்யக் கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த இந்த நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. முதல் மரியாதையோ, தலைப்பாகை மற்றும் குடை பிடிப்பது உள்ளிட்டவற்றால் குறிப்பிட்ட நபரின் அந்தஸ்தை உயர்த்துவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. அனைத்து பக்தர்களும், கிராமத்தினரும் சமமாகவும், ஒரே மாதிரியான மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும். கோயிலுக்குள் அனைவரும் சமமானவர்களே என ஏற்கனவே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கிலும் புதிதாக உத்தரவிட வேண்டியதில்லை. இந்த கிராமத்தைச் சேர்ந்த எந்தவொரு நபர்களையும் தனித்து காட்டிக்கொள்ளும் வகையிலோ, மரியாதையோ கூடாது என உத்தரவிட்டுள்ளார்.