புதுடெல்லி: கோவிஷீல்ட் அல்லது கோவாக்சின் இரண்டு டோஸ் போட்டுக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸாக கோவோவாக்ஸ் பயன்படுத்தும் வகையில் அதற்கான சந்தை அங்கீகாரத்துக்கு மருந்து தர கட்டுப்பாடு ஆணையத்தின் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனம் கண்டுபிடித்த கோவோவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து விநியோகம் செய்யும் உரிமையை சீரம் நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் சீரம் நிறுவனத்தின் இயக்குனர் பிரகாஷ் குமார் கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய மருந்து கட்டுப்பாடு ஜெனரலுக்கு கடிதம் எழுதி இருந்தார். இதில் ‘‘சில நாடுகளில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகின்றது.
எனவே 18வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு கோவோவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசியை வழங்குவதற்கு அனுமதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார். கோவோவாக்ஸ் பூஸ்டர் டோஸ் பயன்பாட்டுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக மருந்து தர கட்டுப்பாடு ஆணையத்தின் நிபுணர்கள் குழுவினர் நேற்று முன்தினம் ஆலோசித்தனர். தொடர்ந்து கோவிஷீல்ட் அல்லது கோவாக்சின் இரண்டு டோஸ் போட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸாக கோவோவாக்ஸ் வழங்கும் வகையில் அதற்கான சந்தை அங்கீகாரத்துக்கு பரிந்துரை செய்துள்ளனர்.