ஜபல்பூர்: மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜா படேரியா. இவர் பன்னா மாவட்டத்தின் பவாய் நகரில் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தை கூட்டினார்.
இந்த கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் மோடி மதம், ஜாதி மற்றும் மொழி அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்துவார். தலித்துகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினரின் எதிர்காலம் அபாய நிலையில் உள்ளது. அரசியலமைப்பை காப்பாற்ற நீங்கள் விரும்பினால், மோடியை காலி செய்ய தயாராக இருங்கள். காலி செய்ய வேண்டும் என்றால் அவரை தோற்கடிக்க தயாராக இருங்கள்’’ என இரட்டை அர்த்தத்தில் பேசினார்.
இதையடுத்து ராஜா படேரியா கடந்த டிசம்பர் 13-ம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த மத்தியபிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் திவிவேதி, “குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற உயர் பதவியில் உள்ளவர்களை பற்றி பேசும்போது தரக்குறைவான மொழியில் பேசக் கூடாது. ஒரு கட்சியில் தலைவராக இருப்பவர் விழிப்புடன் பேச வேண்டும்” என அறிவுரை வழங்கினார்.