கோயம்புத்தூரிலிருந்து மதுரை வந்த இன்டர்சிட்டி விரைவு ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக போன் செய்து புரளி கிளப்பிய பயணி மதுரையில் கைது செயப்பட்டார்.
கடந்த 9-ம் தேதி மாலை 7.30 மணிக்கு, மதுரை இருப்புப் பாதை காவல் நிலையத்துக்கு, `கோயம்புத்தூரிலிருந்து மதுரை வரும் இன்டர்சிட்டி விரைவி ரயிலில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக தகவல் கிடைத்துள்ளது’ என மாநில காவல் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து தெரிவிக்கப்பட்டது.
உடனே இன்டெர்சிட்டி ரயில் மதுரை வந்ததும் வெடிகுண்டு நிபுணர்களால் சோதனை செய்யப்பட்டது. சோதனையில் வெடிகுண்டு ஏதும் இல்லை என உறுதி செய்யப்பட்டது.
இது சம்பந்தமாக மதுரை இருப்பு பாதை காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, பொய் தகவல் தெரிவித்தவர் பயன்படுத்திய செல்போன் அழைப்புகள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது சம்பந்தப்பட்ட நபர் மேலூர் வெள்ளளூரை சேர்ந்த போஸ் என்பது தெரிய வந்து அவரை கைது செய்தனர்.
பின்பு காவல்துறை போஸிடம் விசாரணை நடத்தியதில், “நான் அந்த ரயிலில் அன்றைய தினம் பயணம் செய்தேன். அப்போது அருகில் அமர்ந்து பயணம் செய்தவர்களுடன் எனக்கு தகராறு ஏற்பட்டது. அவர்களை போலீஸில் சிக்க வைக்கவும், போலிஸ் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒரு பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பொய்யான தகவலை அவசர போலிஸ் எண் 100 க்கு போன் செய்து சொன்னேன்” என்று தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட போஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.