கர்நாடக மாநிலத்தில் இன்னும் நான்கு மாதங்களில், சட்டப்பேரவைத்தேர்தல் நடக்கவுள்ளதால், பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் என, அனைத்து கட்சியினரும் பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். இதனால், தேசியத்தலைவர்கள் கர்நாடகத்தை வட்டமிட தொடங்கிவிட்டனர். இந்த நிலையில், நேற்று மாலை, கர்நாடக மாநிலம் ஹப்லி பகுதியில் நடக்கும், 26-வது தேசிய இளைஞர் தின விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
பாதுகாப்பில் படுதோல்வி…
நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி காரில் நின்ற படி, வெளியில் கைகளை அசைத்து மக்களை உற்சாகப்படுத்தும் விதமாக ‘ரோடு ஷோ’ வந்தார். அப்போது, ரோட்டோரம் இருந்த ‘பேரி கார்டு’களை கடந்து, பல அடுக்கு பாதுகாப்பை கடந்த இளைஞர் ஒருவர், கையில் மாலையுடன் பிரதமர் வாகனத்தின் அருகே வந்து விட்டார்.
அந்த நபர் பிரதமரிடம் தனது கையிலிருந்த மாலையை கொடுத்த நிலையில், பிரதமர் அந்த மாலையை வாங்கி தனது காரின் மீது வைத்தார். பிரதமருடன் வந்த பாதுகாப்பு குழுவினர் அந்த இளைஞரை உடனடியாக அப்புறப்படுத்தி, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதுகாப்பில் ஏற்பட்ட தோல்வி குறித்து போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதுவே, மற்ற மாநிலங்களில் நடந்திருந்தால்?
இது குறித்து கர்நாடக காங்கிரஸ் மற்றும் சில அரசியல் விமர்சகர்களிடம் பேசினோம், “பல அடுக்கு பாதுகாப்பை மீறி ஒருவர், பிரதமரின் அருகே சென்று மாலையை கையிலேயே கொடுத்துள்ளார். இது, கர்நாடக போலீஸ், உளவுத்துறை மற்றும் பிரதமரின் பாதுகாப்பு குழுவின் மாபெரும் தோல்வி. பா.ஜ.க ஆட்சி நடக்கும் மாநிலம் என்பதால், அரசியல் அழுத்தத்தால், போலீஸார் இந்த Security Breach குறித்து, பெரிய அளவில் எந்தத்தகவலும் தெரிவிக்காமல், உரிய விளக்கமளிக்காமல் உள்ளனர்.
பா.ஜ.க ஆட்சி நடக்காத பஞ்சாப், தமிழ்நாட்டில், மிகச்சிறிய அளவில் பிரதமருக்கு பாதுகாப்பு வழங்குவதில் பிரச்னை ஏற்பட்டால் கூட, அந்த மாநிலத்தில் ஆட்சியை கலைக்கும் அளவுக்கு, பா.ஜ.கவினர் பேட்டி கொடுத்து, பிரச்னையை பூதாகரமாக்குகின்றனர். ஆனால், கர்நாடகத்தில் பா.ஜ.க ஆட்சி நடப்பதால், இந்த மாபெரும் பாதுகாப்பு குறைபாட்டை கண்டுக்காமல் உள்ளனர். இதுவே மற்ற மாநிலங்களில் நடந்திருந்தால் கதி என்ன? பா.ஜ.க தலைவர்கள் இந்நேரம் போர்க்கொடி துாக்கியிருப்பார்கள்,’’ என்றனர்.