தமிழகத்தில் வருகின்ற நாளை (ஜனவரி 14-ஆம் தேதி) போகி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பழைய பொருட்களை எரிக்க கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஜனவரி 14ஆம் தேதி போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று மற்றும் நாளை (ஜனவரி 14ம் தேதி) ஆகிய 2 நாட்களுக்கு பொதுமக்கள் தங்களது வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிப்பது வழக்கம்.
அதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து பொதுமக்கள் சுவாசிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. குறிப்பாக அதிகாலையில் எரிக்கப்படும் பிளாஸ்டிக், டயர், டியூப் மற்றும் துணிகளால் உருவாகும் நச்சு காற்றால் அதிக அளவில் காற்றை மாசுபடுத்துகிறது.
இந்த மாசுபட்ட நச்சு காற்றை சுவாசிக்கும் ஆஸ்துமா நோயாளிகள், குழந்தைகள், முதியோர்கள் மற்றும் பல்வேறு நோயாளிகளும் மூச்சுத் திணறல் போன்ற உடல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் பழைய துணி, டயர், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரிக்க வேண்டாம் எனவும் பழைய பொருட்களை தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.