பொருளாதார வீழ்ச்சி, அந்நிய செலாவணி கையிருப்பு குறைவு, அரசியல் ஸ்திரத்தன்மையின்மை, சட்ட ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட காரணங்களால், நமது அண்டைநாடான பாகிஸ்தான் திவாலாகும் நிலையில் இருக்கிறது. அதனால், அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை அதிகரித்து பாகிஸ்தான் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
தலைவிரித்தாடும் தட்டுப்பாடு, திண்டாட்டத்தில் மக்கள்:
உணவுப்பொருள் தட்டுப்பாடு:
பாகிஸ்தான் முழுவதும் கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதன் உச்சமாக, பலுசிஸ்தான் மாகாணத்திலுள்ள பெரும்பாலான நகரங்களில் கோதுமை மாவுக்காக பொதுமக்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. மேலும், கோதுமை வாங்குதற்காக அதிகளவிலான மக்கள் கூடியதால் நெரிசல் ஏற்பட்டு 5 பேர் பலியான சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது.
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு:
சமையல் காஸ் சிலிண்டர்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால், பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாண மக்கள், பிளாஸ்டிக் கவர்களிலும், பலூன்களிலும் சமையல் எரிவாயுவை நிரப்பி ஆபத்தான முறையில் வீட்டுக்கு கொண்டுசெல்லும் வீடியோ உலகளவில் வைரலாகி அதிரச்செய்திருக்கிறது. அதில் விபத்து நேர்ந்து பொதுமக்கள் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுவரும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது.
விலைவாசி உயர்வு:
கடுமையான தட்டுப்பாடுகளால் பாகிஸ்தானின் விலைவாசி உயர்வு 23% அதிகரித்திருக்கிறது. அத்தியாவசிய உணவுப்பொருளான கோதுமை மாவின் 20 கிலோ பாக்கெட் ரூ.3,100-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ சர்க்கரை ரூ.155-க்கும், ஒரு கிலோ வெங்காயம் ரூ.280-க்கும், ஒரு கிலோ கோழிக்கறி ரூ.700-க்கும் விற்கப்படுகிறது. ரேஷன் கடைகளைப் பொறுத்தவரையில் அரசால் மானிய விலைக்கு வழங்கப்படும் கோதுமை, சர்க்கரை, நெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை 25% முதல் 62% வரை உயர்ந்திருக்கிறது.
தலைவிரித்தாடும் வேலைவாய்பின்மை:
தட்டுப்பாடுகள் ஒருபுறமிருக்க வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்திருக்கிறது. கிட்டதட்ட 32% இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர். சமீபத்தில், தலைநகர் இஸ்லாமாபாத்தில் காவல்துறை பணிக்கான 1,167 காலியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட எழுத்துத்தேர்வில் சுமார் 32,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட சம்பவமும், வீடியோவும் உலகையே பாகிஸ்தானைப் பார்த்து பரிதாபப்பட வைத்திருக்கிறது.
கடுமையான சட்டங்கள்; பாகிஸ்தான் மீள வாய்ப்புண்டா?
நாளுக்குநாள் அதிகரித்துவரும் பஞ்சத்தால் ஒட்டுமொத்த பாகிஸ்தானும் பரிதாப நிலைக்குச் சென்றிருக்கிறது. தற்போதைய சூழலில், பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பை வைத்து வெறும் 3 வாரங்கள் மட்டுமே சமாளிக்க முடியும் என்ற நிலை உருவாகியிருக்கிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் பல்வேறு அதிரடியான சட்டதிட்டங்களை அறிவித்திருக்கிறது பாகிஸ்தான் அரசாங்கம்.
புதிய மின்சார சேமிப்புத் திட்டம்:
மின்சாரத் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த புதிய மின்சார சேமிப்புத் திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது. அதன்படி, `பாகிஸ்தானிலுள்ள அனைத்து வணிக வளாகங்கள், சந்தைகள் மற்றும் கடைகளை இரவு 8.30 மணிக்குள்ளாகவும், திருமண மண்டபங்களை இரவு 10 மணிக்குள்ளாகவும் மூடிவிடவேண்டும்’ என அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது. இதன்மூலம், சுமார் 6,000 கோடி பாகிஸ்தான் ரூபாயை சேமிக்க முடியும் எனத் தெரிவித்திருக்கிறார் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப். அதேபோல, 2,000 கோடி பாகிஸ்தான் ரூபாயை சேமிக்கும் வகையில், வரும் பிப்ரவரி மாதத்துடன் பல்புகள் உற்பத்தியையும், ஜூலை மாதத்துடன் அதிக மின்சாரச் செலவு பிடிக்கும் ஃபேன்களின் உற்பத்தியையும் நிறுத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்.
அதைத்தொடர்ந்து, பிரதமர் ஷெபாஸ், அரசுத் துறை நிறுவனங்கள், அலுவலகங்களிலும் உடனடியாக 30% மின்சாரப் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார்.
குறைக்கப்பட்ட ரயில்சேவைகள்:
எரிபொருள் தட்டுப்பாடும் தாண்டவமாடி வருவதனால், பயணிகள், சரக்கு ரயில்கள் என அனைத்து ரயில் போக்குவரத்துக்கும் பாகிஸ்தான் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. முக்கிய நகரங்களான கராச்சி, லாகூர் பகுதிகளிலிருந்து இயக்கப்படும் சரக்கு ரயில்கள் பாதியாக குறைக்கப்பட்டுவிட்டன.
அரசு அலுவலகங்கள் விற்பனை:
கடுமையான பண நெருக்கடியால், பாகிஸ்தானிலுள்ள அரசு அலுவலகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக பாகிஸ்தான் அரசாங்கம், அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதிலுள்ள தனது தூதரகத்தையும் விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. சுமார் 4 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்த தூதரகக் கட்டடத்தை பலர் ஏலம் எடுப்பதற்கு முன்வந்திருப்பதாகவும் தகவல்கள் கசிந்திருக்கின்றன.
கழுதை ஏற்றுமதி:
உலகளவில் கழுதைகள் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் மூன்றாமிடத்தில் இருக்கிறது. ஆண்டுக்கு 10 லட்சம் கழுதைகள் அதிரித்து வருவகிறது. அதேசமயம், மருத்துவம் மற்றும் இறைச்சிக்காக கழுதைக்கு சீனாவில் பெரும் கிராக்கி நிலவுகிறது. இந்தநிலையில், சீனாவிடம் அதிகம் கடன்பட்டிருக்கும் பாகிஸ்தான், அந்நாட்டுக்கு கழுதைகளை ஏற்றுமதிசெய்து அதன்மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறது. சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காகவே, மிகப்பெரிய அளவிலான கழுதைப் பண்ணைகளையும் பாகிஸ்தான் அரசாங்கம் ஏற்படுத்திவருகிறது.
உலக நாடுகளின் நிதியுதவி:
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு ஜூனில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கும் அந்நாட்டின் உணவுப்பொருள் தட்டுப்பாட்டுக்கு மிக முக்கியக் காரணம். சுமார் 2,000 பேரை பலிகொண்ட இந்த வெள்ளப்பெருக்கில் 80% விவசாயப் பயிர் சாகுபடியும் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதனால் பாகிஸ்தானுக்கு ஐ.நா. சபை மற்றும் உலக நாடுகள் மத்தியில் அனுதாப அலை வீசியது. அதைத்தொடர்ந்து ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தில் பாகிஸ்தான் வெள்ளப் பேரிடரிலிருந்து மீண்டுவருவதற்காக மனிதநேய அடிப்படையில் சுமார் 9 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதேபோல, அமெரிக்காவும் தன்பங்குக்கு 100 மில்லியன் டாலரை உணவு பாதுகாப்பு உதவித் தொகையாக அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், சர்வதேச நிதியத்திடமிருந்தும் (IMF) சுமார் 650 கோடி டாலரை நிதியுதவியாகக் கேட்டிருக்கிறது பாகிஸ்தான். இப்படியாக, உலக நாடுகள், ஐ.நா, ஐ.எம்.எஃப் அமைப்புகளிடமிருந்து நிதியுதவி பெற்று பஞ்சத்தைப் போக்கிக்கொள்ளலாம் எனவும் பாகிஸ்தான் கருதுகிறது.