சென்னை: சட்டப்பேரவையில் ராமாயணம் கற்பனைக்கதை, மூட நம்பிக்கை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் பேசியதற்கு பாஜக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
சட்டப்பேரவையில் சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனிநபர் தீர்மானம் கொண்டுவந்தார்.
இந்த தீர்மானத்தின் மீது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சட்டப்பேரவை கட்சித் தலைவர் நாகைமாலி, சேது சமுத்திர திட்டத்தை ராமர் பெயரைக் கூறி மத்திய அரசு கிடப்பில் போட்டுவிட்டது. கட்டுக்கதைகள், கற்பனை நம்பிக்கைகளை சிலர் வரலாறு என்கின்றனர். ராமாயணம் சிறந்த இலக்கியப் படைப்பு. ஆனால், அது ஒரு கற்பனைக் காவியம். இதை நான் சொல்லவில்லை. மகாத்மா காந்தி, நேரு கூறியுள்ளனர். ராஜாஜி, இதனை சக்கரவர்த்தி திருமகன் என்று காவியமாகவே படைத்துள்ளார்” என்றார்.
இதையடுத்து பேசிய, பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன், ”உறுப்பினர்கள் ராமாயணம் கற்பனைக்கதை, மூட நம்பிக்கை என்று பேசுகின்றனர். இது அவைக்கு தேவையானதா? ராமரை நாங்கள் தெய்வமாக வழிபடுகிறோம். ராமர் பாலம் கட்டினாரா என்பது வேறு விஷயம். இதுபோன்ற கருத்துகளை வன்மையாக கண்டிக்கிறேன். இதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். தெய்வ வழிபாட்டை குறை சொல்வதை எப்படி ஏற்க முடியும்” என்றார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், “யாரும் தெய்வ நம்பிக்கையை குறைசொல்லி பேசவில்லை. அதை பயன்படுத்தி தடுத்துவிட்டார்கள் என்றுதான் பேசினார்கள். யாரும் அப்படி பேசவில்லை. அப்படி பேசியிருந்தால் நானும் ஏற்றுக்கொள்கிறேன்” என்றார்.