புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் 1968-ம் ஆண்டுக்குப் பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் கடந்த 2006-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களின் பதவிக் காலம் 2011-ம் ஆண்டோடு முடிந்தது.
அதன் பிறகு கடந்த 12 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தவில்லை. சுப்ரீம் கோர்ட் தலையிட்டு, கடந்த 2021ம் அக்டோபர் மாதத்துக்குள் தேர்தலை நடத்தி, முடிவுகளை அறிவிக்க உத்தரவிட்டது.
அதன்படி அந்தாண்டு செப்டம்பர் 22-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.ஆனால், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில், இட ஒதுக்கீடுகளில் குளறுபடி இருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், அந்தாண்டு செப்டம்பர் 29-ம் தேதி உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளி வைத்து, வார்டு குளறுபடிகளை சரி செய்ய உத்தரவிட்டது.
அதனால் உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டை அரசு திரும்பப்பெற்றது. இது அரசியல் கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சி தலைவர் சிவா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ஐகோர்ட்டில் புதுச்சேரி அரசு உறுதியளித்ததை போன்று, புதுச்சேரியில் பிற்படுத்தபட்டோர் இட ஒதுக்கீடு சம்பந்தமாக ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி சசிதரன் தலைமையில், ஒருநபர் கமிஷனை அமைத்தது. இந்த கமிஷன் பிற்படுத்தப்பட்டோர் குறித்த தகவல்கள், புள்ளி விபரங்கள், ஆவணங்கள் உள்ளதா என பிற்படுத்தப்பட்ட அமைப்பு, சங்கங்கள் மற்றும் தனி நபர்களிடம் கருத்துகளை கேட்டறிந்தது.
தற்போது, அனைத்து கள ஆய்வு பணிகளையும் முடித்த தனிநபர் கமிஷன், உள்ளாட்சி தேர்தலில் ஓ.பி.சி.,பிரிவுக்கு இட ஒதுக்கீடு செய்ய வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்த பரிந்துரை செய்துள்ளது.
இந்த கணக்கெடுப்பு நடத்தகவர்னர் தமிழிசையும்ஒப்புதல் அளித்துள்ளார். எனவே, விரைவில் நகராட்சி, கொம்யூன் பஞ்சாய்த்துகளில் வார்டு வாரியாக உள்ள பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்யும் பணி துவங்கஉள்ளது. இப்பணியை எந்த துறையின் வாயிலாக நடத்தலாம் என தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
உள்ளாட்சி தேர்தலில், பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 33.5 சதவீதம், பழங்குடியினருக்கு 0.05 சதவீதம் புதுச்சேரி நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் இட ஒதுக்கீடு வழங்க கடந்த 2019 ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பின் அந்த அரசாணை திரும்ப பெறப்பட்டது. தற்போது ஓ.பி.சி., கணக்கெடுப்பு முடிந்ததும் அதன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. எனவே இப்போதைக்கு ஓ.பி.சி.,கணக்கெடுப்பு முடியும் வரை உள்ளாட்சி தேர்தல் நடக்க வாய்ப்பில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement