Budget 2023: வரி செலுத்துவோருக்கு ஜாக்பாட் நிவாரணம்? டிபிஎஃப் வைத்த கோரிக்கை

வருமான வரி விலக்கு: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதி நாட்டின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டுக்காக பல்வேறு அமைப்புகள் ஏற்கனவே தங்கள் ஆலோசனைகளையும் கோரிக்கைகளையும் வழங்கத் தொடங்கியுள்ளன. டிபிஎஃப் அமைப்பும் அத்தகைய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது. இதில், வருமான வரியில் ரூ.5 லட்சம் தள்ளுபடி வழங்க வேண்டும் என்று நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

இதுதவிர நிலையான விலக்கு (ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன்) தொகையையும் ரூ.1 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. பிபிஎஃப்-ல் அதிகபட்ச முதலீட்டு வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் அவர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. 7000-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் பட்டயக் கணக்காளர்கள் (சார்டர்ட் அகவூண்டண்ட்) இந்த டிபிஎஃப் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன் ரூ.1 லட்சமாக உயரும்

‘ஸ்டாண்டர்ட் டிஸ்கஷனை ரூ.1 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன்வைத்துள்ளோம்’ என்று டிபிஎஃப் தேசிய தலைவர் பங்கஜ் ஓஸ்வால் தெரிவித்துள்ளார். தற்போது இந்த விலக்கு 50 ஆயிரம் ரூபாயாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட்டில் இந்த கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டால், வரி விலக்கு நிவாரணம் கிடைக்கும். ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன் என்பது உங்கள் சம்பளத்திலிருந்து நேரடியாகக் கழிக்கப்படும் தொகையாகும். 

அதாவது, உங்கள் ஆண்டு வருமானம் 10 லட்சம் ரூபாய் என்றால், தற்போதுள்ள விதிகளின்படி, உங்கள் வருமானத்தை 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக அரசு கருதும். மாறாக, இந்த விலக்கு ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டால், புதிய விதிகளின்படி ரூ.10 லட்சம் வருமானத்தை ரூ.9 லட்சமாக வருமான வரித்துறை கருதும்.

பிபிஎஃப்-ல் அதிக முதலீடு செய்ய முடியும்

பிபிஎஃப்-ல் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்ப்டவில்லை. இருப்பினும், டிபிஎஃப் இப்போது பிபிஎஃப்-இல் அதிகபட்ச முதலீட்டு வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று கோரியுள்ளது. தற்போது ஒரு நிதியாண்டில் பிபிஎஃப் கணக்கில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மட்டுமே முதலீடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதை 3 லட்சமாக உயர்த்த வேண்டும் என டிபிஎப் கோரிக்கை விடுத்துள்ளது. பிபிஎஃப்-இல் முதலீடு செய்யப்பட்ட தொகை எதுவாக இருந்தாலும், அதற்கு வருமான வரித் துறை சட்டத்தின் 80C பிரிவின் கீழ் விலக்கு அளிக்கப்படுகிறது. 

இந்த வழியில், இந்த பட்ஜெட்டில் முதலீட்டின் அளவு ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டால், வரி செலுத்துவோருக்கு இது மிகப்பெரிய நிவாரணமாக அமையும். ஏனெனில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் முழுத் தொகைக்கும் வரி விலக்கு கிடைக்கும்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.