சென்னை: சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. பொங்கல் திருவிழாவையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்றைய தினம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்திருந்தார். ஆளுநருக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. பின்னர் வருகை தந்த அனைவரையும் ஆளுநர் கைகூப்பி வணங்கி வரவேற்றார். தொடர்ந்து அவர் மனைவி லட்சுமி ரவியுடன் இணைந்து மண்பானையில் பொங்கல் வைத்து மகிழ்ந்தார்.
மேலும் தமிழர்களின் கலை சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் நாட்டுப்புற நடனங்கள், சிலம்பாட்டம், இசை நிகழ்ச்சி உள்ளிட்டவைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதனை ஆளுநர் ஆர்.என்.ரவி, மனைவியுடன் அமர்ந்து ரசித்தார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், எதிர்க்கட்சித் தலைவர் பழனி சாமியும் ஆளுநருடன் அமர்ந்து கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர். இறுதியில் அனைவருக்கும் விருந்தளிக்கப்பட்டது.
விழாவில் முன்னாள் ஆளுநர்கள் எம்.கே.நாராயணன், எம்.எம்.ராஜேந்திரன், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, செல்லூர் ராஜு, செங்கோட் டையன், சி.விஜயபாஸ்கர், தங்கமணி, வேலுமணி, கே.பி.அன்பழகன், திண்டுக்கல் சீனிவாசன், தளவாய் சுந்தரம், காமராஜ், பாஜக எம்எல்ஏ-க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், சி.சரஸ்வதி, எம்.ஆர்.காந்தி, பெருந்தலைவர் மக்கள்கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் டிஜிபிசங்கர், நிதித்துறைச் செயலர் முருகானந்தம், பொதுத் துறை செயலர் டி.ஜெகநாதன், வேளாண்துறை செயலர் சி.சமயமூர்த்தி பங்கேற்றனர்.
முன்னதாக, ஆளுநரின் பொங்கல் விழா அழைப்பிதழில் ஏற்பட்ட சர்ச்சையால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பொங்கல் விழாவில் பங்கேற்கவில்லை.