விஜய்யின் 66வது படமாக கடந்த ஜனவரி 11ம் தேதி தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகியிருக்கிறது வாரிசு. வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் ஜெயசுதா, சரத்குமார், ராஷ்மிகா, யோகிபாபு, ஷாம் என பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.
சிறப்புக் காட்சி முதற்கொண்டு விஜய் ரசிகர்கள் வாரிசு பட வெளியீட்டை ஆரவாரத்தோடு கொண்டாடித் தீர்த்து வரும் அதே வேளையில், படத்தின் கதை மீது கலவையான விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.
இப்படி இருக்கையில், வாரிசு படம் குறித்து பெண் ஒருவர் பேசியிருக்கும் வீடியோ ட்விட்டர், ஃபேஸ்புக் என அனைத்து தளங்களிலும் படுவைரலாகி வருகிறது. அதில், “குடும்பத்தில் நடக்கும் பிரச்னைகள் அனைத்தையும் பெண்கள் பொறுத்துக்கிட்டு போகனும்னு ரொம்ப மார்டனா சொல்லியிருக்கு இந்த படம். கணவன் இன்னொரு பெண்ணோடு இருந்தாலும் சரி, குடும்பத்துக்காக பெண்கள் குழந்தைகளை பாத்துட்டு இருக்கனும் என்ற அரதப் பழசான 50 வருஷாம சொல்லிட்டு வருவதை திரும்ப மாடர்னா சொல்றது ரொம்ப மோசம்.
இந்த காலத்துல எவ்வளவோ பேசுறோம். ஆனால், திரும்பவும் பெண்களை எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு வீட்லயே இருங்கனு சொல்லும் இது மாதிரி படங்கள் வரக்கூடாது. குடும்பங்குறது ஜனநாயகமா இருக்கனும். அதை பத்தி எந்த படங்களும் பேசுறதில்லை. மீண்டும் மீண்டும் பெண்கள்தான் எல்லாத்தையும் சகிச்சுட்டு போகனும்னு சொல்றது இவ்ளோ பட்ஜெட்ல படம் எதுக்கு?” என்றெல்லாம் அப்பெண் பேசி விளாசி எடுத்திருக்கிறார்.
பெரிய நடிகர்கள் திரையில் பேசும் அரசியலுக்கு, மக்கள் மத்தியிலும் கடுமையான தாக்கம் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. தமிழ்நாட்டு அரசியலையே மாற்றி அமைத்த பெருமை, நம் சினிமாக்களுக்கு உண்டு. சமீபகாலமாக பெண்களையும், பெண் விடுதலையையும் மய்யப்படுத்தி வெளிவரும் படங்களான ஜெய ஜெய ஜெய ஹே, கார்கி போன்றவை சமூகத்தில் பெரிய அளவில் தாக்கத்தையும் மாற்றங்களையும் ஏற்படுத்தி வரும் சூழலில், விஜய் மாதிரியான ஒரு உச்சநட்சத்திரம், இப்படியான ஒரு கருத்தை தன் படத்தில் முன்மொழியத்தான் வேண்டுமா என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. பெண் உரிமைக்காகவோ, பெண்ணின் விருப்பத்தை மதிப்பது குறித்தோ நட்சத்திர நடிகர்கள் பேசாமல் கடந்து செல்வதை காட்டிலும் ஆபத்தானது, இதுபோன்ற பெண்ணை அடிமைப்படுத்தும் தவறான கருத்துகளை முன்வைப்பது என்கின்றனர் விமர்சகர்கள்.