கிருஷ்ணகிரி: பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் செல்லக்குட்டப்பட்டி கிராமத்தில் கள ஆய்வுக்கு சென்ற மாணவர்கள், தமிழகத்தின் 5வது ஜல்லிக்கட்டு நடுகல்லை கண்டுபிடித்துள்ளனர். கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம், தொல்லியல் துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் இணைந்து “மாணவர்களை நோக்கி வரலாறு” என்ற இயக்கத்தை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக நேற்று பாரூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு, வரலாறு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி பங்கேற்று, வரலாற்றின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். தொடர்ந்து, மாணவர்களை அருகில் உள்ள செல்லக்குட்டபட்டி திரௌபதி அம்மன் கோயில் பகுதிக்கு கள ஆய்விற்கு அழைத்துச்சென்றனர். இந்த கள ஆய்வின் போது, வீரகவுண்டர் என்பவரது நிலத்தில், புதர் மூடியிருந்த நடுகல்லை நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சுத்தம் செய்தனர். அப்போது அந்த கல், தமிழகத்தின் 5வது ஜல்லிக்கட்டு நடுகல் என்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் கண்டறியப்பட்டுள்ள 2வது நடுகல் இது வாகும்.
சேலம் மாவட்டத்தில் இரண்டும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒன்றும், கிருஷ்ணகிரி மாவட்டம் அகரத்தில் கண்டுபிடித்த நடுக்கல் ஒன்றும் என மொத்தம் 4 ஜல்லிக்கட்டு நடுகற்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள இந்த நடுகல் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 5வது நடுகல் ஆகும். தற்போது இங்கு கண்டுபிடிக்கப்பட்டு உள்ள நடுகல்லில், வீரன் காளையின் திமிலை பற்ற முற்படுவது போலவும், அதே நேரம் காளை அவ்வீரனை தன் கொம்பால் குத்தும் பானையிலும் காட்டப்பட்டுள்ளது. ஏறுதழுவுதலின் போது இறந்திருந்தாலும், இவன் ஒரு போர் வீரன் என்பதை குறிக்கும் வண்ணம் மேல்பகுதியில் ஒரு வாள் படுக்கைவாக்கில் காட்டப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் பட்டுத்துறை என்ற இடத்தில் ஒரு ஏறு தழுவும் நடுகல் உள்ளது. சங்க காலப் பெண்கள் ஏறுதழுவலில் வெற்றிப்பெற்ற ஆண்களையே திருமணம் செய்துகொள்ள விரும்புவர். இதனால் இவ்விளையாட்டு, அப்போது சிறப்பு வாய்ந்த ஒன்றாய் இருந்து வந்தது. பிற்காலத்தில் காளையின் கொம்பிலோ, கழுத்திலோ தங்கம் முதலான அணிகலன்களை கட்டி, அதனை அவிழ்ப்பவருக்கு அது சொந்தம் என்பதாக மாறியது. அதுவே தற்போது ஜல்லிக்கட்டானது. தற்போது மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் சிறப்பாக ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது என்றாலும், அது குறித்த பழங்கால தடயங்கள் அனைத்தும் சேலம், கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை பகுதியில்தான் கிடைக்கிறது. இதற்கு முக்கிய காரணம், இப்பகுதி முல்லை நிலப்பகுதி.
ஆதலால் கால்நடைகளே இவர்களின் முக்கிய செல்வமாய் இருந்தது. அவர்களுடைய வாழ்வியலும் கால்நடைகளை சார்ந்தே அமைந்திருந்தன. எனவேதான், இப்பகுதியில் ஏறுதழுவுதல், ஆநிரை மீட்டல் போன்ற நடுகற்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. பொங்கல் தினத்தையொட்டி தமிழகத்தில் குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏறு தழுவும் நடுகல் (எருது விடும் ஜல்லிக்கட்டு) கண்டறியப் பட்டிருப்பது சிறப்பாகும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வு பணியின் போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, காப்பாட்சியர் கோவிந்தராஜ், தொல்லியல் அலுவலர் பரந்தாமன், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், பள்ளியின் தலைமை ஆசிரியர் முரளி, சக்திவேல், உமா, மேனகா, சிவராஜ், விஜயகுமார், சதானந்தன், கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.