தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட விசிக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார். சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்காமலும், தமிழகத்தின் தலைவர்கள் பெயரை புறக்கணித்த ஆளுநர் செயல்பட்டு கண்டித்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தினர். முதலில் சின்னமலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்ததில் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், காங்கிரஸ் கட்சி கோபன்னா மற்றும் விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது மத்திய அரசுக்கு எதிராகவும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நடவடிக்கையை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து ஆளுநர் தமிழகத்தை விட்டு வெளியேறும் வரை போராட்டம் நடக்கும் என தெரிவித்தனர்.
கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பேசியபோது, தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியை கொண்டு வர ஆளுநர் முயற்சிக்கிறார். தமிழ்நாடு என்ற பெயரை படிக்க தவிர்க்கிறார். ஏற்கனவே ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காததால் இன்றளவும் தமிழகத்தில் உயிரிழப்பு நடப்பதாக தெரிவித்தார். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு எதிராக செயல்படுவது ஏற்புடையதல்ல என்றார். ஜனநாயம் காப்பாற்றப்பட வேண்டும். அதற்காகவே விசிக, இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து ஆளுநர் நடவடிக்கைக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவதாக தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் ஜி.ராமகிருஷ்ணன் பேசியபோது, தமிழக தலைவர்களின் பெயரை கூட ஆளுநர் படிக்க மறுக்கிறார். இது தொடர்பாக குடியரசு தலைவரிடம் திமுக வலியுறுத்தி இருக்கிறது. அடுத்து மார்க்சிஸ்ட் கட்சி ஆளுநரை கண்டித்து தனியாக போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்தார். இனி ஆளுநர் நடவடிக்கையால் இருக்கும் ஓட்டு கூட தமிழகத்தில் பாஜகவுக்கு கிடைக்காது என்றார்.
இறுதியாக பேசிய விசிக தலைவர் திருமாவளவன், நாகலாந்து மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆளுநர் தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். தமிழ்நாடு என்ற பெயர் அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது. பேரறிஞர் அண்ணாவுக்கு முன்பே பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற இருக்கின்றனர். ஆனாலும் தமிழ்நாடு என்ற பெயரை உச்சரிக்க மறுப்பதாகவும், தொடர்ந்து பெரியார், அம்பேத்கர் பெயரை படிக்க மறுப்பதாகவும், அதனால் தான் தமிழக ஆளுநர் வெளியேற வேண்டும் என வலியுறுத்தினார்.
ஆளுநர் இல்லாமல் பேரவை கூட்டம் கேரளா, மேற்கு வங்கத்தில் நடத்துவதுபோல், தமிழகத்திலும் நடத்த வேண்டும் என்றார். தொடர்ந்து மாவட்ட வாரியாக ஆளுநர் செயல்பாடுகளுக்கு எதிரான போராட்டம் நடக்கும் என தெரிவித்தார். போராட்டம் காரணமாக சின்னமலை அருகே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ஆளுநர் மாளிகை நோக்கி போராட்டம் நடைபெற்றதால் காவல்துறையினர் கூடுதலான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM