கீவ்: உக்ரைன் – ரஷ்யா போர் தீவிரமாக நடந்து வரும் சோலிடர் பகுதியில் பொதுமக்கள் சிக்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புத்தாண்டைத் தொடர்ந்து ரஷ்யா – உக்ரைன் இடையே போர் சற்று தளர்த்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், மீண்டும் இரு தரப்பிலும் சண்டை தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில், உக்ரைனின் சோலிடர் பகுதியில் கடந்த சில நாட்களாக அதிக தீவிரமாக போர் நடந்து வருகிறது.
மேலும், சோலிடர் பகுதியில் 500-க்கும் அதிகமான பொதுமக்கள் சிக்கிக் கொண்டிருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில், சோலிடர் நகரை பாதுகாக்க போதிய ஆயுதங்கள் உக்ரைன் ராணுவத்திடம் இருப்பதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதற்கிடையே ஒருமாத போராட்டத்துக்குப் பிறகு உக்ரைனின் சோலிடர் பகுதி தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைனின் கிழக்கு நகரமான கிராமடோர்ஸ்கில் ரஷ்ய ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 600-க்கும் மேற்பட்ட உக்ரைன் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், அவர்களது ஆயுதமும் அழிக்கப்பட்டதாக ரஷ்ய ராணுவம் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்தது. முன்னதாக, புத்தாண்டு தினத்தில் ரஷ்யாவின் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள், உக்ரைனால் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்தத் தாக்குதலை ரஷ்யா நடத்தியது.
உக்ரைன் – ரஷ்யா போர் : அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் இணைய உக்ரைன் முடிவெடுத்தது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளுடனும் உக்ரைன் நெருக்கம் காட்டியது. இந்த நடவடிக்கைகளால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி, உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. தொடர்ந்து உக்ரைன் – ரஷ்யா போர் நடைபெற்று வருகிறது. போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.