ஜேர்மன் தொழில் நிறுவனங்கள் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப படாத பாடு பட்டுக்கொண்டிருக்கின்றனவாம்.
இரண்டு மில்லியன் பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை
ஜேர்மன் தொழில் நிறுவனங்கள் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப திணறிக்கொண்டிருக்கும் நிலையில், நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் சுமார் இரண்டு மில்லியன் பணியிடங்களுக்கு பணியாட்கள் தேவைப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய ஜேர்மன் தொழில்துறை மற்றும் வர்த்தக அமைப்பின் தலைவரான Achim Dercks என்பவர், பணியிடங்கள் காலியாக இருப்பதால், சுமார் 100 பில்லியன் யூரோக்கள் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆய்வில் தெரியவந்த உண்மை
ஆய்வாளர்கள் ஜேர்மனியிலுள்ள 22,000 நிறுவனங்களை ஆய்வுக்குட்படுத்தியபோது, அவற்றில் பாதி நிறுவனங்கள் பணியாளர் காலியிடங்களை நிரப்ப திணறிக்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
ஜேர்மனி பல ஆண்டுகளாகவே தொழில்துறை, விருந்தோம்பல் துறை, மருத்துவத்துறை மற்றும் கட்டுமானத்துறை போன்ற பல துறைகளில் பணியாளர் தட்டுப்பாட்டை சந்தித்து வருகிறது. கோவிட் பிரசினைக்குப் பின் அந்த தட்டுப்பாடு மிகவும் அதிகமாகிவிட்டது.
குறிப்பாக திறன்மிகுப்பணியாளர்களைக் கண்டுபிடிக்க நிறுவனங்கள் மிகவும் திணறிக்கொண்டிருக்கின்றன. தொழில்துறையிலுள்ள 58 சதவிகித நிறுவனங்களில் பணியாளர் தட்டுப்பாடு நிலவுகிறது.
இயந்திரங்கள் தயாரிப்பு (67%) மற்றும் தானியங்கி (65%) ஆகிய துறைகளில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு நிறுவனங்கள் பணியாளர்கள் கிடைப்பதில் பிரச்சினை உள்ளதாக தெரிவித்துள்ளன.
ஆகவே, German Chamber of Commerce and Industry (DIHK) என்னும் ஜேர்மன் தொழில்துறை மற்றும் வர்த்தக அமைப்பு, தொழிலாளர்களை மையமாகக் கொண்டு செயல்படும் புலம்பெயர்தலை எளிதாக்குமாறு அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது.