தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 9-ம் தேதி நடைபெற்ற இந்தாண்டின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னுடைய உரையின்போது, அரசு தயாரித்துக்கொடுத்த உரையிலிருந்த சிலவற்றை வாசிக்காமல் தவிர்த்து, அவையிலிருந்து பாதியிலேயே கிளம்பியது அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், 13-ம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அன்றே அறிவித்தார். அதன்படி சென்னையில் இன்று வி.சி.க சார்பில், திருமாவளவன் தலைமையில் ஆளுநர் மாளிகை போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்துப் பேசிய திருமாவளவன், “ஆளுநருடைய செயல்பாடுகளை இன்று நாடே கண்டித்துக் கொண்டிருக்கிறது. ஆளுநர் அப்படி என்ன செய்தார், சட்டப்பேரவையில் நடந்துகொண்டது மட்டும்தான் பிரச்னையா என்று கேட்டால், அதுதான் இல்லை. அவர் வந்த நாளிலிருந்து பிரச்னைதான். தான்தோன்றித்தனமாக செயல்படுகின்ற துணிச்சல் இந்த ஆர்.என்.ரவிக்கு மட்டுமல்ல, ஏற்கெனவே இருந்த பன்வாரிலால் புரோஹித்துக்கும் இருந்தது. அ.தி.மு.க ஆட்சியிலிருந்த சென்னா ரெட்டிக்கும் இருந்தது.
ஆர்.என்.ரவி எழுப்பியிருக்கிற முரண் என்பது நாம் பேசுகிற அரசியல் கொள்கைகளுக்கு எதிரானது. தமிழ்நாட்டைக் குறிவைத்துவிட்டார்கள். அந்த அளவுக்குத் தமிழ்நாடு, பா.ஜ.க அரசியலுக்கு எதிரான இருக்கத்தைக் கொண்டிருக்கிற ஒரு மாநிலம். அவர்களின் அரசியல் இங்கே ஈடுபடாத அளவுக்கு திராவிட அரசியல் என்பது ஆளுமை செலுத்துகிறது. சில எதிரிகள், தி.மு.க எதிர்ப்பாளர்கள், நம்மையும் சேர்த்து திராவிட அரசியலுக்கு முட்டுக்கொடுக்கிறோம், தி.மு.க அரசியலுக்கு முட்டுக்கொடுக்கிறோம் என்று விமர்சிக்கிறார்கள். அறியாமையால் விமர்சிக்கிறவர்களும் உண்டு, காழ்ப்புணர்ச்சியால் விமர்சிக்கிறவர்களும் உண்டு. நாங்கள் தி.மு.க-வுக்காக ஆர்.எஸ்.எஸ்ஸை எதிர்க்கவில்லை இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் எதிர்க்கிறோம்.
இன்றைக்கு கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. அங்கே ஒரு முஸ்லீமை ஆளுநராகப் போட்டு அங்கு நெருக்கடியைத் தந்துகொண்டிருக்கிறார்கள். ஆளுநர் இல்லாமலேயே நாங்கள் சட்டசபை நடத்துவோம் என்கிற அளவுக்கு இன்றைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணிந்து முடிவெடுத்திருக்கிறது. மம்தா பானர்ஜியும் ஆளுநர் இல்லாமல் சட்டசபையை நடத்திக்காட்டியிருக்கிறார். ஜெயலலிதாவும், சென்னா ரெட்டி ஆளுநராக இருந்தபோது, அவர் இல்லாமலே ஒரு கூட்டத்தொடரை நடத்திக்காட்டியிருக்கிறார். முதல்வர், ஆளுநர் ஆர்.என்.ரவி இல்லாமலேயே அடுத்த கூட்டத் தொடரை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறினார்.
பின்னர் போலீஸார், திருமாவளவனையும், வி.சி.க-வினரையும் கைதுசெய்து அழைத்துச் சென்றனர்.