டெல்லி: பனிமூட்டம் காரணமாக டெல்லியில் தொடர்ந்து விமான சேவை பாதிக்கப்படுவதால் பயணிகள் அவதிபட்டு வருகின்றனர். தலைநகர் டெல்லி உள்பட வடமாநிலங்களில் காலை வேளையில் கடுமையான பனி மூட்டம் நிலவுகிறது. விடியற்காலை நேரங்களில் பனி மூட்டம் அதிக அளவில் நிலவி வருவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமப் படுகின்றனர். அதுமட்டுமில்லாமல், சிறிது தொலைவு மட்டுமே சாலைகள் தெரிவதால் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி வாகன ஓட்டிகள் செல்லும் நிலை உள்ளது. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி வரை அடர்ந்த பனிமூட்டம் காணப்படுவதால், ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. விளக்குகளை எரியவிட்டபடி சென்றாலும், ரயிகளை இயக்குவதில் சிரமம் நிலவுவதாக கூறப்படுகிறது. இதேபோன்று பனி மூட்டத்தால், டெல்லி விமான நிலையத்துக்கு வரவேண்டிய விமானங்களும் தாமதமாக வந்திறங்கின. நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து சுமார் 60 விமானங்கள் டெல்லிக்கு தாமதமாக வந்திறங்கின. டெல்லியில் பனிமூட்டத்தால் 22 சர்வதேச விமானங்கள் தாமதமானதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
அதேபோல் மேற்கு உத்தர பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதேபோல் கிழக்குப்பகுதி மாநிலங்களான அசாம், மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் பனிமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.