ரேபிடோ பைக் டாக்சி சேவைக்கு மகாராஷ்டிராவில் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. பைக் சேவைகள் குறித்த கொள்கை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்காதது ஏன்? என அம்மாநில அரசிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
குறுகிய காலகட்டத்திலேயே குறைந்த கட்டண சேவைக்காக பிரபல டாக்சி சேவைகளுக்கு இணையான கவனத்தைப் பெற்றது ரேபிடோ. ஆனால் இந்த சேவை இனிமேல் மகாராஷ்டிரா மக்களுக்கு கிடைக்கப்போவதில்லை என்பதுதான் சோகம். ரேபிடோ சேவைக்கு லைசன்ஸ் இல்லை என்பது உறுதியானதை அடுத்து மும்பை உயர் நீதிமன்றம் தற்போது அச்சேவைக்கு தடை விதித்திருக்கிறது. நாடு முழுவதும் லைசன்ஸ் இன்றி சேவையை நடத்திவருவதாகவும் கூறியிருக்கிறது.
கடந்த மாதம் 29ஆம் தேதி பைக் டாக்சி சேவைகளுக்கு அனுமதி கிடையாது என அம்மாநில அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து ரேபிடோ நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இவ்வழக்கு விசாரணையின்போது, தங்கள் நிறுவனத்தின் உரிமம் மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்கவேண்டும் என ரேபிடோ நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் ரேபிடோ நிறுவனத்திடம் முறையான உரிமம் இல்லாததால் ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை. இதனையடுத்து இன்று மதியம் 1 மணி முதல் பைக் சேவையை நிறுத்த அந்நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தவிட்டது.
ரேபிடோ சேவைக்கு மகாராஷ்டிரா அரசு உரிமம் வழங்குமாறு அந்நிறுவனம் நீதிமன்றத்தில் முறையிட்டது. ஆனால் மாநில அரசு இதுவரை பைக் டாக்சி சேவைகளுக்கான கொள்கை எதுவும் வகுக்காததால், அதனை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதனையடுத்து ரேபிடோ நிறுவனம் சேவையை நிறுத்திக்கொள்வதாக ஒப்புக்கொண்டது. ஜனவரி 20ஆம் தேதிவரை சேவைக்கு தடை விதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து மகாராஷ்டிரா மாநில அரசை சாடிய நீதிமன்றம், இதுவரை பைக் டாக்சி சேவைகளுக்கான கொள்கை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன? என கேள்வி எழுப்பியது. இதுகுறித்து பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், பைக் டாக்சிகளை வைத்திருக்கும் உபெர் போன்ற பிற டாக்ஸி சேவைகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து, இந்த பிரச்னையை நெருப்பில் தொங்கவிட முடியாது. உடனடியாக முடிவை எடுக்கவேண்டும் என எச்சரித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM