பிப். 1ல் பொது பட்ஜெட் தாக்கல்; 35 பொருட்களின் சுங்க வரியை உயர்த்த முடிவு: ஒன்றிய நிதியமைச்சக வட்டாரங்கள் தகவல்

புதுடெல்லி: வரும் பிப். 1ல் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால் 35 பொருட்களின் சுங்க வரியை உயர்த்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. நாடாளுமன்றத்தில் வரும் பிப்ரவரி 1ம் தேதி 2023-24ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அதனால் பொது பட்ஜெட்டை தயார் செய்யும் பணியில் ஒன்றிய நிதியமைச்சகம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பொது பட்ஜெட்டின் போது அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிகளில் சில மாற்றங்கள் செய்யப்படுகிறது. இதன் காரணமாக சில பொருட்களின் விலை குறைப்பும், சில பொருட்களின் விலை உயர்த்துதல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும். இதுகுறித்து நிதியமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘பிப். 1ல் தாக்கல் செய்யப்படும் பொது பட்ஜெட்டில் குறைந்தது 35 பொருட்களுக்கான சுங்க வரியை உயர்த்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் இந்த பொருட்களின் விலைகள் அடுத்த நிதியாண்டில் இருந்து உயரக்கூடும்.

சுங்க வரியை அதிகரிப்பதால், குறிப்பிட்ட பொருட்களின் இறக்குமதியைக் குறைக்க முடியும். மேலும், அந்த பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க முடியும். மேலும் ஒன்றிய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கும் ஊக்குவிக்க முடியும். சுங்க வரியை அதிகரிக்கக்கூடிய அத்தியாவசியமற்ற பொருட்களை அடையாளம் காணுமாறு கடந்த மாதம், ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்திடம் பட்டியல் கோரப்பட்டுள்ளது.

அத்தியாவசியமற்ற பொருட்களின் மீதான சுங்க வரி அதிகரிப்பதால், இறக்குமதி செலவைக் குறைக்க முடியும். பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் பொது பட்ஜெட்டானது, 2024 பொதுத் தேர்தலுக்கு முன்னர் தாக்கல் செய்யப்படும் கடைசி முழு பட்ஜெட்டாக இருக்கும்’ என்று அந்த வட்டாரங்கள் கூறின.

கட்டண சலுகை கிடைக்குமா?
கடந்த பல ஆண்டுகளாக, வருமான வரியில் எந்த நிவாரணத்தையும் ஒன்றிய அரசு வழங்கவில்லை. இந்த ஆண்டு பிரதமர் மோடியின் இரண்டாவது பதவிக்காலத்தின் கடைசி பொது பட்ஜெட் என்பதால் வரி செலுத்துபவர்களும், வயதானவர்களும் ரயில் கட்டணத்தில் விலக்கு கிடைக்குமா? என்று எதிர்நோக்கி உள்ளனர். ரயில்வே அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி பார்த்தால், ரயில்வேயின் வருவாய் பலமடங்கு அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் 2022 முதல் டிசம்பர் 2022 வரையிலான முதல் 9 மாதங்களில் ரயில் கட்டணம் மூலம் மட்டும் ரூ.48,913 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ரயில்வேயின் வருமானம் 71% அதிகரித்துள்ளது. கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான (60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 40% கட்டண சலுகை; 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50% கட்டண சலுகை) கட்டண சலுகை மீண்டும் அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.