ராஜமெளலியின் `ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற `நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதுக்கு அடுத்து திரைத்துறையினருக்குக் கொடுக்கப்படும் உயரிய விருதாகக் கருதப்படும் ‘கோல்டன் குளோப்’ விருதினை வென்றது.
ரசிகர்கள் மற்றும் திரைத்துரையினர் எனப் பலரும் படக்குழுவினருக்கும், இப்பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மரகதமணிக்கும் (கீரவாணி) தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் மற்றும் இயக்குநரான வினித் சீனிவாசன், இசையமைப்பாளர் மரகதமணியை முதன்முதலில் சந்தித்த தருணம் பற்றி நெகிழ்ச்சியாகப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இது பற்றி கூறியுள்ள அவர், “சில வருடங்களுக்கு முன் நான் தங்கியிருக்கும் எதிர் பிளாட்டில் ஒரு நடுத்தர வயது கணவன் மனைவி வசித்தனர். கணவர் மலையாளி (தலைச்சேரி), மனைவி ஆந்திராவைச் சேர்ந்தவர். நான் அவர்களுடன் நட்பு ரீதியாகப் பழகி வந்தேன். ஒருநாள் நான் வெளியே சென்று விட்டு காரில் எனது அபார்ட்மெண்டுக்குத் திரும்பியபோது பார்க்கிங் பகுதியில் எதிர் பிளாட் பெண்மணியுடன் இன்னொரு நடுத்தர வயது நபர் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். என்னைப் பார்த்த அந்தப் பெண்மணி அருகில் அழைத்து அந்தப் புதிய நபரை தனது சகோதரர் என அறிமுகப்படுத்தினார். அவரின் பெயரைக் கேட்டதும் நான் திகைத்துப் போனேன். அதற்கு முன்பாக அவரது பெயரையும் புகழையும் குறித்து நான் கேள்விப்பட்டிருந்தாலும் அவர் முகம் எனக்குச் சரியாக நினைவில் இல்லை. அப்படிப்பட்ட ஒரு ஜாம்பவானை அன்று சந்தித்ததை மிகப்பெரிய அதிர்ஷ்டமாகக் கருதினேன். இன்று அவர் கோல்டன் குளோப் விருது வென்றுள்ளார். அவரின் பெயர் எம்.எம்.கீரவாணி” என்று குறிப்பிட்டுள்ளார் வினித் சீனிவாசன்.