தமிழ்நாடு சட்டசபையில் கடந்த 9-ம் தேதி நடைபெற்றக் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் மாநில அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் சிலவற்றை தவிர்த்தும், அவையிலிருந்து பாதியில் வெளியேறியதும் அரசியல் அரங்கில் அனலை கிளப்பியது. ஆளுநரின் இந்தச் செயல் தொடர்பாக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அவரை அவரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்த விவகாரத்தில், முதல்வர் ஸ்டாலின் `ஆளுநரை அவதூறாகப் பேசக்கூடாது’ என தன்னுடைய கட்சியினருக்கு அறிவுரை வழங்கியிருந்தார். இருப்பினும், ஆர்.எஸ்.பாரதி உட்பட தி.மு.க-வினர் சிலர் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை அவதூறாகப் பேசிவருவதாக பா.ஜ.க-வினர் குற்றம்சாட்டிவருகின்றனர்.
இந்த நிலையில், விருகம்பாக்கத்தில் நடைபெற்ற பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் தி.மு.க தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநரைப் பற்றி அவதூறாகப் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையைக் கிளப்பியது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியனும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகராட்சி காவல் ஆணையருக்கு, ஆளுநரின் இணைச்செயலாளர் பிரசன்னா ராமசாமி கடிதம் அனுப்பியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், “தமிழ்நாடு ஆளுநரை அவதூறாகப் பேசியதன் காரணமாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது குற்றவியல் வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆளுநர் தரப்பிலிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், தி.மு.க பேச்சாளர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கமிஷனர் சங்கர் ஜிவால் சட்ட ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.