களைகட்டிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. 28 காளைகளை அடக்கி 7 லட்சம் மதிப்புள்ள காரை தட்டி சென்ற விஜய்.. இன்று நிகழ்ந்த சுவாரசியங்கள் என்னென்ன..?

பொங்கல் திருநாளை ஒட்டி, மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று காலை தொடங்கியது. வழக்கமாக போட்டியின்போது ஊர் தலைவர்களுக்கு வழங்கப்படும் முதல் மரியாதை ஏதுமின்றி, சமத்துவமான முறையில் போட்டி தொடங்கிய நிலையில், அமைச்சர்கள், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் முன்னிலையில் உறுதி மொழி ஏற்றுக் கொண்டு, காளையர்கள் களமிறங்கினர்.

ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட காளைகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, அனுமதி சீட்டு விநியோகிக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனைக்கு பிறகே, காளைகள் வாடிவாசலுக்குள் அனுமதிக்கப்பட்டன. 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும், 700க்கும் மேற்பட்ட காளைகளும் போட்டியில் கலந்து கொண்டன.

சரியாக, காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியதும், வாடிவாசல் வழியாக முதல் காளையாக கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனைத் தொடர்ந்து, முன்பதிவு செய்யப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக களமிறக்கப்பட்ட நிலையில், வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை, வீரர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு அடக்கினர். அப்போது சிலருக்கு காயம் ஏற்பட்டது.

சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மல்லுக்கட்டி அடிக்கிய காளையர்களுக்கு தங்கக்காசு, அண்டா, நாற்காலி உள்ளிட்ட பரிசுகள் உடனக்குடன் வழங்கப்பட்டன. வீரர்களிடம் சிக்காமல் திமிறிச்சென்ற காளைகளின் உரிமையாளர்களும் பரிசுகளை வென்றனர்.

போட்டியின்போது சில சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறின. அவனியாபுரத்தைச் சேர்ந்த சூர்யா என்ற 9 வயது சிறுவன் அவிழ்த்த காளை, போட்டியில் வெற்றி பெற்றது. சிறுவன் சூர்யா சட்டையை கழற்றி வீசி, காளையை உற்சாகமூட்டி வெற்றிபெற வைத்ததைக் கண்டு, பலரும் வியப்படைந்தனர்.

அவனியாபுரத்தை சேர்ந்த அழகுபேச்சி என்ற பள்ளி மாணவி அவிழ்த்த காளையை மாடுபிடி வீரர் விஜய் அடக்கினார். இருப்பினும், தான் பெற்ற பரிசை வீரர் விஜய், மாணவியிடமே கொடுத்து வாழ்த்து தெரிவித்து அனுப்பி வைத்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி, மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த விஜய் என்ற இளைஞர் 28 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்து, 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான காரை தட்டிச் சென்றார்.

17 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தை பிடித்த கார்த்திக் என்ற இளைஞருக்கு இருசக்கர வாகனமும், 13 காளைகளை அடக்கி மூன்றாம் இடத்தை பிடித்த பாலாஜி என்ற இளைஞருக்கு ஒரு பாசு மாடும் பரிசாக வழங்கப்பட்டன.

சிறந்த காளைக்கான முதல் பரிசு மதுரையைச் சேர்ந்த ஜி.எம்.காமேஷ் என்பவரது காளைக்கு அறிவிக்கப்பட்டது. அவருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. 2வது பரிசு வில்லாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரது மாட்டிற்கும், 3வது பரிசு அவனியாபுரத்தைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு வாஷிங் மெஷின் மற்றும் பசு மாடு பரிசாக வழங்கப்பட்டன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.