கடலூர்: பன்னீர் கரும்புகள் வயலிலேயே விற்று தீர்ந்ததால் கடலூர் விவசா யிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் சுமார் 700 ஏக்கர் அளவில் பன்னீர் கரும்புகளை விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர். இந்த ஆண்டு இப்பகுதிகளில் 742 ஏக்கர் பன்னீர் கரும்பு பயிரிட்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனாவால் பன்னீர் கரும்புகள் விலை போகவில்லை.
விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. ஆனால், இந்தாண்டு பன்னீர் கரும்பு செழித்து நன்றாக வளர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த ஒரு வாரமாக மாவட்டத் தில் கரும்பு வெட்டும் பணி நடந்து வருகிறது. 20 கழி கொண்ட ஒரு கட்டு ரூ.350-க்கு வெட்டும் இடத்திலேயே விற்பனை செய்யப்பட்டது.
இங்கிருந்து சென்னை, வேலூர் போன்ற பகுதிகளுக்கு வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். ஒரு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்துள்ளனர். ஏக்கருக்கு 600 முதல் 700 கட்டுகள் வரை கரும்பு வெட்டப்பட்டது. இதனால் ஒரு ஏக்கருக்கு ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை விற்பனையானது.
தமிழக அரசின் பொங்கல் தொகுப்பில் கொடுப்பதற்காக, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் ஒரு பகுதி பன்னீர் கரும்புகளை அரசு அறிவித்த ரூ.33 விலை கொடுத்து வாங்கிவிட்டனர். இதற்காக கடலூர் மாவட்ட குடும்ப அட்டைதரார்களுக்கு 40 ஏக்கரில் விளைந்துள்ள பன்னீர் கரும்புகள் போதுமானது.
மீதமுள்ள 700 ஏக்கர் கரும்புகளை மாவட்ட நிர்வாகம் வாங்கி சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 7 மாவட்டங்களுக்கு அனுப்பிவைத்துள்ளது. வெளியூர் வியாபா ரிகளும் கரும்பு வெட்டும் இடத் திற்கே வந்து வாங்கிச் சென்றனர்.
மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பன்னீர் கரும்பு வயலிலேயே விற்று தீர்ந்ததால் விவசாயிகள் பெருத்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக சேத்தியாத் தோப்பு பகுதியைச் சேர்ந்த பன்னீர் கரும்பு விவசாயிகள் கூறுகையில், “மாவட்ட நிர்வாகம் கரும்பு கொள்முதல் செய்ததால் உடனே பணத்தை பார்த்துவிட்டோம். தனியார் வியாபாரிகளும் கரும்புகளை வெட்டும் இடத்திலேயே பணத்தை தருகிறார்கள். இதனால் அனைத்து பன்னீர் கரும்பு விவசாயிகளும் மகிழ்ச்சியில் உள்ளோம்” என்றார்.