பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை. உலகப் புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பொங்கல் தினமான இன்று நடைபெற்றது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தென்காள் பாசன விவசாயிகளுக்கும் அவனியாபுரம் கிராம மக்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் 10 உறுப்பினர் கொண்ட குழுவும் அவனியாபுரத்தை சேர்ந்த 16 பேர் கொண்ட குழுவும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தினர். இன்று தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில் காலை முதலே மறுபடி வீரர்கள் ஆர்வத்துடன் காளைகளை அடக்கினர்.
இன்று நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 49 பேர் காயமடைந்தனர். இதில் 23 பேருக்கு படுகாயங்களும், 26 பேருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த 23 பேரில் 14 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 28 காளைகளை அடக்கிய ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த விஜய் என்பவருக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சார்பில் முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. அதேபோன்று 17 காளைகளை அடக்கிய அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.