Jallikattu 2023: வாடிவாசல் எப்போது திறக்கும்? என்று ஆவலுடன் காத்திருப்பது காளைகள் மட்டுமல்ல, வீரத்தை காட்ட காத்திருக்கும் காளையர்களும் தான்… தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் மூன்றாம் நாளான இன்று மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. இயற்கைக்கு நன்றி சொல்லும் சிறப்பு பண்டிகையான பொங்கல், ஒரு நாளல்ல, தொடர்ந்து சில நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நாளில், பழையன கழித்து, இரண்டாவது நாளில், சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி சொல்லி பொங்கல் வைத்த தமிழர்கள், மூன்றாம் நாளான இன்று, உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யும் வீட்டு விலங்குகளுக்கு நன்றி சொல்லி, அவற்றை கொண்டாடும் மாட்டுப் பொங்கல் திருநால் இன்று.
மாடுகளை வணங்கும் திருநாள் மாட்டு பொங்கலன்று, காளைகளுடன் விளையாடும் வீரர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. வீடுகளில் உள்ள மாடுகளை குளிப்பாட்டி, அழகுபடுத்தி, அலங்காரித்து, பொங்கலிட்டு வழிபடுவது ஒரு வகை என்றால், அவற்றுடன் விளையாடி அவற்றை போற்றுவது, காளைகளுக்கு காளையர் செலுத்தும் வீர வணக்கம். இந்த வீர வணக்கம் இன்று ஒரு நாளுடன் முடிந்துவிடுமா?
உழைப்பைக் கொட்டும் மாடுகளை போற்றும் வகையில், கொண்டாடப்படும் பண்டிகையில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்காக, ஆண்டு முழுவதும் காளைகளை பராமரித்து பயிற்சி எடுத்துக் கொள்வார்கள் காளையர்கள். வீரக் காளைகளை அடக்கும் வீரர்கள், மாடுபிடி வீரர்களின் எதிர்பார்ப்புகளும், உழைப்பும் இன்று வாடிவாசலில் காத்திருக்கிறது..
இன்று, மதுரையில் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது. நேற்று அவனியாபுரத்தில் சிறப்பான வகையில், ஜல்லிக்கட்டு போட்டி நடந்து முடிந்தது. உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை நடைபெறும்.
ஏறு தாழுவுதல்’ என்றும் ‘மஞ்சு விரட்டு’ என்றும் அழைக்கப்படும் ஜல்லிக்கட்டை காண அனைவரும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருப்பதைப் போலவே, காளைகளும் வாடிவாசலில் இறங்க காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள உள்ள மாடுபிடி வீரர்கள், madurai.nic.in என்ற இணையதளத்தில் தங்களது பெயர்,புகைப்படம், வயது சான்றிதழ், கொரானா தடுப்பூசி இரண்டு தவணை செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் முதலியவைகளை பதிவேற்றம் செய்துள்ளனர்.
அத்துடன் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்குள் எடுக்கப்பட்ட கோவிட் RT PCR Test சான்றை கொடுக்க வேண்டும். அதில் கொரோனா தொற்று இல்லை என்று இருந்தால் தான் ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துக் கொள்ள முடியும்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் இருக்கலாம் என்ற கட்டுப்பாட்டுடன், காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளருக்கும் அனுமதி உண்டு. ஆனால், அவர்களும் இரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.