ஆதியோகி சிலையை திறந்து வைத்த முதலமைச்சர்!!!…

பெங்களூரு அருகே ஆதியோகி சிலையை கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை திறந்துவைத்தார்.

ஈஷா அறக்கட்டளை சார்பில் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் நந்திமலை அருகே யோகா மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையத்தில் 112 அடி உயர பிரமாண்டமான ஆதியோகி சிலை நிறுவப்பட்டுள்ளது.

கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி சிலையை போன்று, பெங்களூரு அருகே உள்ள சிக்கபல்லாபுரத்தில் 112 அடியில் ஆதியோகி சிலை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

மகர சங்கராந்தி தினமான நேற்று ஈஷா நிறுவனர் சத்குரு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் முன்னிலையில், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பங்கேற்று ஆதியோகி சிலையை திறந்து வைத்தார்.

திறப்பு விழாவின் ஒரு பகுதியாக, ஆதியோகி சப்தரிஷிகளுக்கு யோக விஞ்ஞானத்தை பரிமாறிய வரலாற்றை 3டி ஒளி, ஒலி காட்சியாக விவரிக்கும் கண்ணை கவரும் ‘ஆதியோகி திவ்ய தரிசனம்’ நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும், ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் மற்றும் சவுண்ட்ஸ் ஆப் ஈஷா குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

ஆதியோகி சிலைக்கு முன்பாக, சக்திவாய்ந்த யோகேஸ்வர லிங்கத்தை சத்குரு பிரதிஷ்டை நடைபெற்றது. இதற்கு முன்பு, கடந்த அக்டோபர் மாதம் அங்கு நாக பிரதிஷ்டை நடைபெற்றது. மக்களின் ஆன்மிக வளர்ச்சிக்காக சிக்கபல்லாபுரத்தில் உருவாக்கப்பட்டுள்ள சத்குரு சந்நிதியில், ஆதியோகி மட்டுமின்றி, கோவை ஈஷா யோகா மையத்தில் இருப்பதை போன்று லிங்க பைரவி, இரண்டு தீர்த்த குண்டங்கள், ஈஷா சம்ஸ்கிரிதி பள்ளி, ஈஷா ஹோம் ஸ்கூல், ஈஷா லீடர்ஷிப் அகாடமி ஆகிய கட்டமைப்புகளும் படிப்படியாக உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கோவையில் உள்ள ஆதியோகி திருவுருவத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2017-ம் ஆண்டு திறந்து வைத்தார். இதையடுத்து, ஆதியோகியை தரிசனம் செய்வதற்காக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் கோவைக்கு வருகை தருகின்றனர்.

ஆதியோகி திருவுருவமானது உலகளவில் மிகப்பெரிய மார்பளவு சிலை என்ற அடிப்படையில் கின்னஸ் சாதனை பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.