ஆண்டுதோறும் பொங்கல் திருநாளின் பொழுது திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்து அக்கட்சியின் தொண்டர்கள் வாழ்த்து பெறுவது வழக்கம். அந்த வகையில் வழக்கம் போல் இந்த ஆண்டும் பொங்கல் திருநாள் வாழ்த்து தெரிவிக்க திமுக தொண்டர்கள் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்திற்கு வந்திருந்தனர். கட்சித் தொண்டர்களிடம் வாழ்த்து பெற்ற திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அனைவருக்கும் புதிய 100 ரூபாய் நோட்டுகளை பரிசாக வழங்கினார்.
திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி இருந்த பொழுதே இது போன்ற தொண்டர்கள் சந்திப்பு ஒவ்வொரு பொங்கலுக்கும் நடப்பது வழக்கம். அப்பொழுது அவர் அனைத்து கட்சி தொண்டர்களுக்கும் பரிசாக ரூ.100 நோட்டு வழங்கவார். அதனை திமுக தொண்டர்கள் செலவு செய்யாமல் பத்திரமாக பாதுகாத்து வைத்திருப்பார்கள்.
அதே வேளையில் சில தொண்டர்கள் அந்த ரூபாய் நோட்டை பிரேம் போட்டு தங்களது வீட்டின் வரவேற்பறையில் வைத்து இருப்பார்கள். அதே பாணியில் தற்போதைய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அக்கட்சியின் தொண்டர்களுக்கு புதிய ரூ.100 நோட்டுக்களை பரிசாக வழங்கி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் கையால் ரூ.100 நோட்டு பெற்றுக் கொண்ட கழக உடன்பிறப்புகள் உற்சாகமடைந்தனர்.