நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது வெளிநாட்டு கப்பல் மோதி குமரி விசைபடகு சேதம்: 14 மீனவர்கள் சிக்கி தவித்ததால் பரபரப்பு

குளச்சல்: குளச்சல் மரமடிய தெருவை சேர்ந்தவர் குருசப்பன். இவரது மகன் ரெஸ்லின் டானி (38). அதே பகுதியை சேர்ந்த 4 பேருடன் பங்குதாரராக சேர்ந்து விசைப்படகு வைத்து மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். கடந்த 12ம் தேதி வழக்கம்போல் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். படகை ரெஸ்லின் டானி ஓட்டினார்.

தொழிலாளர்களாக குளச்சல் பகுதியை சேர்ந்த ரீகன் (36), ஜார்ஜ் (43), மர்வின் (37), ராமன் துறையை சேர்ந்த சோனி (53), ஜான்சன் (50), சின்னமுட்டத்தை சேர்ந்த தியோ (33), அழிக்காலை சேர்ந்த எட்வின்ராஜ் (27), சிபு (27), ஒடிசாவை சேர்ந்த கேதர் ஜெனோ (28), அமீர் (43), உ.பி.யை சேர்ந்த கமலேஷ் (26), லோகேஸ் (23), பின்று (21) ஆகிய தொழிலாளிகன் என்று மொத்தம் 14 பேர் சென்றனர். 14ம் தேதி மதியம் கன்னியாகுமரியில் நடுக்கடல் பகுதியில் 69 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் நங்கூரம் பாய்ச்சி படகு நிறுத்தப்பட்டிருந்தது.

அப்போது, பிடித்த மீன்களை ஐஸ் போட்டு பதப்படுத்தி கொண்டிருந்தனர். சிலர் தூண்டிலை சரி செய்து கொண்டிருந்தனர். இன்னும் சிலர் சமையல் வேலையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற லைபீரியா நாட்டை சேர்ந்த போஸ்டன் என்ற எண்ணெய் கப்பல் எதிர்பாராதவிதமாக விசைப்படகு மீது மோதி விட்டு சென்றது. இதில் மீனவர்கள், தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். படகுக்குள்ளேயே விழுந்த அவர்கள் என்ன நடந்தது என்பதை அறிவதற்குள் படகு சரிய தொடங்கியது. மேலும் கப்பல் மோதியதில் படகு உடைந்து விரிசல் ஏற்பட்டது.

இப்படியே படகை இயக்கினால் தண்ணீர் புகுந்து விடும் என்பதால் அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த மற்றொரு படகிற்கு தகவல் தெரிவித்து உதவிக்கு அழைத்தனர். அதற்குள் படகு சரிய தொடங்கியது. இதனால் 14 மீனவர்களும் பீதியடைந்தனர். செய்வதறியாது திகைத்த நேரத்தில் உதவிக்கு அழைத்த படகு விரைந்து வந்து 14 மீனவர்களையும், விசைப்படகையும் மீட்டனர். பின்னர் அவர்கள் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்தனர். இந்த சம்பவத்தில் சேதமடைந்த விசைப்படகின் மதிப்பு ரூ..1.25 கோடி என்று கூறப்படுகிறது. இது குறித்து ரெஸ்லின் டானி, குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இழுத்து சென்ற கப்பல்
கடலில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்ட இந்த படகு மீது கப்பல் மோதியதும் நங்கூரத்தின் கயிறு கப்பலின் பிரப்பலரில் சிக்கியது. இதனால் படகை சிறிது தூரம் கப்பல் இழுத்து சென்றது. இதை கவனித்த மீனவர் மெர்வின் நங்கூரத்தின் கயிறை அறுத்துவிட்டு படகை விடுவித்தார். பின்னர் வி.எச்.எப் 16 வயர்லெலில் காப்பாற்றுமாறு மீனவர்கள் கப்பலுக்கு தகவல் தெரிவித்தும், கப்பல் ஊழியர்கள் அதை பொருட்படுத்தாமல் சென்றுவிட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.