புதுடெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த 39 நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களில் செயல்பாட்டு அளவில் தருமபுரி எம்.பி செந்தில் குமாரும், தென்காசி எம்.பி தனுஷ் குமாரும் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பிடித்துள்ளதாக மக்களவை செயல்பாடுகள் குறித்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
புள்ளி விவரங்கள் அளிப்போர் யார்? – எம்.பிக்களின் செயல்பாடுகள் தொடர்பான விவரங்களை பி.ஆர்.எஸ் இந்தியா என்ற தன்னார்வ அமைப்பு தொடர்ந்து சேகரித்து அவற்றை இணையத்தில் (www.prsindia.org) பதிவேற்றி வருகிறது. பி.ஆர்.எஸ் இந்தியா அளிக்கும் தரவுகளைக் கொண்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து தமிழகத்தைச் சேர்ந்த பிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷன் எனும் தன்னார்வ அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிடுகிறது. அந்த அறிக்கை என்ன கூறுகிறது என்பதை தற்போது பார்ப்போம்.
செயல்பாடு எவ்வாறு கணக்கிடப்படுகிறது?: நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு பிரச்சினை குறித்து அவையில் தாங்களே எழுப்பி பேசும் சுயமுயற்சி விவாதங்கள் (Initiated debates), அவையில் அவர்கள் எழுப்பும் கேள்விகள், அவையில் அவர்கள் கொண்டு வரும் தனிநபர் மசோதாக்கள் ஆகிய 3 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு உறுப்பினர்களின் செயல்பாடுகள் மதிப்பிடப்படுகின்றன. இந்த மூன்றின் கூட்டுத் தொகை புள்ளிகளாக குறிப்பிடப்படுகின்றன.
அதிக புள்ளிகள் பெற்றவர்கள்: தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்களில் தருமபுரி எம்.பி.செந்தில் குமார் (திமுக) 453 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். தென்காசி எம்.பி தனுஷ்குமார்(திமுக) 409 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
அதிக கேள்விகளை எழுப்பியவர்கள்: மக்களவையில் அதிக கேள்விகளை எழுப்பியதில் செந்தில்குமார் முதலிடத்தில் உள்ளார். இவர் 384 கேள்விகளை எழுப்பியுள்ளார். இவரை அடுத்து 375 கேள்விகளுடன் தனுஷ்குமார் இரண்டாம் இடத்தில் உள்ளார். இருவருமே இதுவரை நடைபெற்றுள்ள அனைத்து அமர்வுகளிலும் பங்கேற்று பணியாற்றியுள்ளனர்.
சுயமுயற்சி விவாதங்கள்: தேனி எம்.பி ரவீந்திரநாத் 97 சுயமுயற்சி விவாதங்களில் (Initiated debates) பங்கேற்று தமிழக எம்.பிக்களில் விவாதங்களில் முதலிடம் பெற்றுள்ளார். 66 சுயமுயற்சி விவாதங்களில் பங்கேற்று தருமபுரி எம்.பி செந்தில்குமார் 2-ம் இடம் பிடித்துள்ளார்.
தனிநபர் மசோதாக்கள்: சென்னை தெற்கு தொகுதி எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் 8 தனிநபர் மசோதாக்களை அறிமுகம் செய்து தமிழக எம்.பிக்களில் தனிநபர் மசோதா பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார். 3 தனிநபர் மசோதாக்களை கொண்டு வந்து இருவர் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். ஒருவர் தருமபுரி எம்.பி செந்தில் குமார். மற்றொருவர் ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி. | முழுமையான பட்டியல்: > தமிழக மக்களவை எம்.பி.க்களின் செயல்பாடு