பள்ளிக் கல்வி விவகாரம்: டெல்லி துணைநிலை ஆளுநர் இல்லம் நோக்கி முதல்வர் கேஜ்ரிவால், எம்எல்ஏக்கள் பேரணி

புதுடெல்லி: டெல்லியின் பள்ளி ஆசிரியர்கள் பின்லாந்து சென்று பயிற்சி பெறும் மாநில அரசின் முடிவில் ஆளுநர் தலையீடு செய்வதை எதிர்த்து ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள், அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆளுநர் இல்லம் நோக்கி திங்கள்கிழமை பேரணியாகச் சென்றனர்.

டெல்லி அரசுப் பள்ளி ஆசிரியர்களை பயிற்சிக்காக பின்லாந்து அனுப்ப திட்டமிட்டிருந்தது. மாநில அரசின் இந்த முடிவில் துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா தலையிட்டு எதிர்ப்பு தெரிவித்தகாக கூறப்படுகிறது. இந்த விவாகரம் ஆளுநர் – முதல்வருக்கு இடையேயான மோதல் போக்கின் சமீபத்திய விஷயமாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்த நிலையில், டெல்லி அரசின் முடிவில் ஆளுநர் தலையிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் திங்கள்கிழமை ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்றனர். டெல்லி சட்டப்பேரவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் பேரணி நடந்தது.

பேரணிக்கு முன்பாக ஊடகங்களிடம் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், “இந்த அரசு டெல்லி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு. இது டெல்லியிலுள்ள வரி செலுத்துவோரின் பணம். டெல்லியின் கல்விக்காக செலவு செய்யப்படுகிறது. இதில் ஆளுநருக்கு என்ன பிரச்சினை?

முதல்வரும் எம்எல்ஏக்களும் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்ல நேர்ந்ததது துரதிர்ஷ்டவசமானது. இனியாவது துணைநிலை ஆளுநர் தனது தவறை உணர்ந்து ஆசிரியர்களை பின்லாந்து செல்ல அனுமதிப்பார் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

பேரணியில் சென்ற எம்எல்ஏக்கள் “துணைநிலை ஆளுநரே பள்ளி ஆசிரியர்களை பயிற்சிக்காக பின்லாந்து செல்ல அனுமதியுங்கள்” என்ற பதாகைகளை கைகளில் ஏந்திய படியும் கோஷமிட்டும் சென்றனர்.

இந்தப் பேரணி, ஆளுநர் மாளிகை அருகே சென்றபோது, ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், “எந்த ஒரு அறிக்கையும் தவறாக புரிந்து கொள்ளப்படும் வாய்ப்பு உள்ளது. மாணவர்களின் கல்வியின் தரத்தில் ஏற்படுத்தும் மாற்றத்தின் அடிப்படையில் பள்ளி ஆசிரியர்கள் வெளிநாட்டுக்கு பயிற்சி திட்டத்தினை மதிப்பீடு செய்து அதன் செலவுகளை ஆய்வு செய்யுமாறு அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இதற்கு முன்பு இவ்வாறு வெளிநாட்டிற்கு சென்று பயிற்சிக்காக சென்ற திட்டங்களின் பலன்களை ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆம் ஆத்மி எம்எல்ஏ சவுரப் பரத்வாஜ் சட்டப்பேரவையில், “பள்ளிக் குழந்தைகளின் கல்வி மற்றும் ஆசிரியர்களின் பயிற்சியில் தேவையற்ற மற்றும் சட்டவிரோதமான தலையீடு” என்ற பெயரில் விவாதத்தினை முன்மொழிந்தார். மேலும் “ஆசிரியர்கள் பின்லாந்து செல்லட்டும்”, “ஆசிரியர்களை பயிற்சிக்கு அனுமதியுங்கள்”, “ஏழைக்குழந்தைகளை படிக்க விடுங்கள்” என்ற முழக்கங்கள் சட்டப்பேரவையில் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி, பாஜக எம்எல்ஏக்களுக்கு வாய்த்தகராறு மூண்டது. இதனால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. டெல்லி சட்டப்பேரவையின் மூன்று நாள் கூட்டத்தொடரின் முதல்நாள், அவை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. பத்து நிமிடம் கூட அவைத் தொடர்ச்சியாக நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.