மதுரை: சென்னையில் இருந்து 17-வது ஆண்டாக ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண வந்த 80 வயது மூதாட்டி முதல் ஆள் மாறாட்டம் செய்த 8 மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம் வரை மதுரை பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் கவனம் ஈர்த்தவற்றை விவரிக்கிறது இந்தத் தொகுப்பு.
- சென்னை வண்டலூரை சேர்ந்த 80 வயது மூதாட்டி சொர்ணம்மாள், கடந்த 17 ஆண்டாக பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் பார்க்க வந்து கொண்டிருக்கிறார். இதற்காக அவர், சென்னையில் இருந்து பஸ் அல்லது ரயில் மூலமாக திட்டமிட்டு ஜல்லிக்கட்டு நடக்கும் நாளில் இந்த விளையாட்டை பார்க்க வந்து கொண்டிருக்கிறார். ஜல்லிக்கட்டுப்போராட்டம் அலங்காநல்லூரில் நடந்தபோது சென்னையில் இருந்து வந்து இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். அவர் கூறுகையில், ‘‘ஜல்லிக்கட்டு நம்முடைய பாரம்பரியம், அதை காக்க நடக்கும் வீர விளையாட்டுக்கு என்னால் முடிந்த ஆதரவை தெரிவிக்கவே ஒவ்வொரு ஆண்டும் வருகிறேன், ’’ என்றார்.
- பாலமேடு ஜல்லிக்கட்டில் இறந்த பாலமேட்டை சேர்ந்த மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜன், சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். திருமணம் ஆகாதவர். சென்னையில் கட்டிட வேலை செய்து வருகிறார். ஜல்லிக்கட்டு போட்டிக்காகவே சென்னையில் இருந்து ஊருக்கு வந்து வந்துள்ளார். சொந்த ஊரில் அதிக காளைகளை அடக்கி சிறந்த மாடுபிடி வீரராக வேண்டும் என்பதுதான் இவரின் இலக்காக இருந்துள்ளது. இந்த முறை அதை நிறைவேற்றும் ஆசையில் இருந்தபோது பரிதாபமாக உயிரிழிந்தார்.
- அஜித் நடித்த துணிவு படத்தின் வில்லன் நடிகர் ஜான் கொக்கைன் இன்று பாலமேடு ஜல்லிக்கட்டு பார்க்க வந்தார். பாலமேடு அருகே புதிய படமொன்றின் படப்பிடிப்பிற்காக வந்த அவர், பாரம்பரிய ஜல்லிக்கட்டை கேள்விப்பட்டு நேரில் பார்க்க வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். அவரைப் பார்த்த ஜல்லிக்கட்டு ரசிகர்கள், அவரை சூழ்ந்துகொண்டு செல்பி எடுத்தனர். அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
- மாடுபிடி வீரர்களை பரிசோதிக்கவும், காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சை வழங்கவும் 160 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர், 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் 15 பேர் பாலமேட்டிற்கு வந்திருந்தனர்.
- ஜல்லிக்கட்டில் பங்கேற்க முறையான மருத்துவ பரிசோதனையில் பங்கேற்று தகுதிச்சான்றுடன் டோக்கன் பெற்ற மாடுபிடி வீரர்களுக்கு பதிலாக பனியன்களை மாற்றி பலர் இன்று ஆள்மாறாட்டம் செய்து போட்டியில் பங்கேற்க முயன்றனர். போட்டி ஏற்பாட்டாளர்கள் அவர்களை கண்டறிந்து போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்தனர். இன்று மட்டும் ஆள் மாறாட்டம் செய்த 8 மாடுபிடி வீரர்கள் தகுதிநீக்கம் செய்து போலீஸார் வெளியேற்றினர்.
- பாலமேடு ஜல்லிக்கட்டுப்போட்டியில் செய்தியாளர்கள் திருமலை சீனிவாசன், காவல் ஆய்வாளர் சிவகுமார், தலையாரி ராஜேந்திரன், உள்பட 36 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
- ஜல்லிக்கட்டுப்போட்டிகளில் முறைகேடுகளை தடுக்கவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கண்காணிக்கவும் மாவட்ட காவல் தொழில்நுட்ப பிரிவு போலீஸார் 8 சுழலும் கேமிராக்களை கொண்ட 2 வாகனங்களில் போட்டி நடவடிக்கைகளை கண்காணித்தனர்.
- ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வரும் ஜல்லிக்கட்டு போட்டியில், 30-க்கும் மேற்பட்ட பெண்கள் தாங்கள் வளர்த்து வந்த காளைகள் வாடிவாசலில் அவிழ்க்கப்பட்டது. இதில், மேலூர் சென்னகரம்பட்டியை சேர்ந்த பெண்ணின் காளை, சத்திரப்பட்டியை சேர்ந்த விஜயா தங்கபாண்டி என்பவரின் காளை, ஒரு இன்ஜினியரிங் மாணவி வளர்த்த காளை போன்ற சிலரின் காளைகள் மாடுபிடி வீரர்களை சிதறி ஓடவிட்டதோடு சிறப்பான ஆட்டத்தைக்காட்டி பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றன.
- பாலமேடு ஜல்லிக்கட்டில் உள்ளூர் கிராம காளைகளுக்கு முதல் மரியாதை வழங்கி வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டதால் கிராமத்தின் மிகுந்த உற்சாகமடைந்து ஆர்ப்பரித்தனர்.
- பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த இரண்டாவது காளைக்கான பரிசாக அலங்காநல்லூரை சேர்ந்த பொறியாளர் பொன்.குமார் வழங்கிய ரூ.1 லட்சம் மதிப்புள்ள கன்றுடன் கூடிய நாட்டின பசு மாடு சிறப்பு பரிசாக வழங்கப்பட்டது. அவர் நாட்டின காளை வளர்ப்போரை ஊக்கப்படுத்த இந்த நாட்டின பசு மாட்டினை தொடர்ந்து வழங்குவேன் என்று தெரிவித்தார். | காண > பாலமேடு ஜல்லிக்கட்டு புகைப்படத் தொகுப்பு