நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகே ராமநாதபுரம் பகுதியில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் மங்களபுரம், முள்ளுக்குறிச்சி, காயல்பட்டி மற்றும் தம்மம்பட்டி உள்பட பல பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும், 50-க்கும் மேற்பட்ட காளைகளும் பங்கேற்றன.
இதையடுத்து வாடி வாசலில் இருந்து துள்ளி வரும் மாடுகளை வீரர்கள் பிடித்து தங்களது வீரத்தை காட்டி விளையாடி வந்தனர். இந்த போட்டியைப் பார்ப்பதற்கு சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான மாடு பிடி வீரர்களும் கலந்துகொண்டனர். இதையடுத்து வாடி வாசலில் இருந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடிப்பதற்கு முயற்சி செய்தனர்.
அப்போது ஒரு காளை அருகில் இருந்த விவசாய நிலத்திற்கு சென்று அங்கிருந்த கிணற்றில் விழுந்தது. இதையறிந்த அந்த பகுதியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காளையை மீட்டனர். ஆனால் அந்த காளை உயிரிழந்து. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த மங்களபுரம் மற்றும் ஆயில்பட்டி போலீசார் அனுமதியின்றி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியை தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக போலீசார் தெரிவித்ததாவது,
“ஜல்லிக்கட்டு போட்டி அனுமதியின்றி நடப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் நாங்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று போட்டியை தடுத்து நிறுத்தினோம். மேலும், காளை கிணற்றில் விழுந்து உயிரிழந்தது தொடர்பாக விசாரணை செய்து வருகிறோம். மேலும், அனுமதியின்றி போட்டி நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றுத் தெரிவித்தார்.